லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் விநாயகர்!
ஆர்.கே.பேட்டை: ஏரியில் களிமண் எடுத்ததில் இருந்து, லிங்கத்திற்கு தன் துதிக்கையால், விநாயகர் தொடர்ந்து அபிஷேகம் நடத்துவது போன்ற சிலையை, இளைஞர்கள் உருவாக்கி உள்ளனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், ஜி.எஸ்.டி.நகரில், சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. காசு கொடுத்து சிலையை வாங்கி வராமல், ஏரியில் இருந்து களிமண் எடுத்து வந்து, பகுதி இளைஞர்கள் தாங்களே உருவாக்கினர்.எளிமையாக இருக்குமோ என நினைத்தால், அதுதான் இல்லை. விநாயகர் தன்னுடைய துதிக்கையால், லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்வது போன்று தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர். துதிக்கையில் இருந்து தொடர்ந்து பால் ஊற்றுவது போன்ற இயந்திரத்தை பொருத்தி, தங்களின் திறமையை இளைஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். வித்தியாசமான இந்த விநாயகர் சிலையை, பகுதிவாசிகள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, விநாயகருக்கு, 108 குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பின், நேற்று மாலை, களிமண் எடுத்து வரப்பட்ட அதே ஏரியில், விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.