திருநள்ளார் கோவிலில் இந்திர விமானம் வெள்ளோட்டம்
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு, புதிதாக செய்யப்பட்டுள்ள இந்திர விமானத்தின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. காரைக்கால், திருநள்ளாரில் அமைந்துள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநள்ளாருக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய விழாக்களில், இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடப்பது வழக்கம். இந்திர விமானம் மிகவும் பழுதடைந்ததால், புதிதாக செய்வதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, ரூ.12 லட்சம் மதிப்பில், 15 அடி உயரம், 6 அடி அகலம், 3.5 டன் எடை கொண்டதாக, புதிய இந்திர விமானம் செய்யப்பட்டுள்ளது. பர்மா தேக்கு மரத்தில் குதிரை, பிரம்மா உள்ளிட்ட சுவாமி சிலைகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு, சப்பரம் மற்றும் இந்திர விமானத்திற்கு சிறப்பு பூஜையும், மகா தீபா ராதனையும் நடந்தது. தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், சார்பு ஆட்சியர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் வடம் பிடித்து, வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகளில் இந்திர விமானம் சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.