காஞ்சி கோவில்களை வழிபட போறீங்களா?
காஞ்சிபுரம் நகரின் கோவில்களை வழிபட வரும் பக்தர்களுக்கு, போதுமான தங்குமிடங்களை, நகராட்சி தரப்பில் கூட வழங்காத நிலையில், இந்து தர்ம சத்திரம் எனும் விடுதி, பல ஆண்டுகளாக, வெளியூர் பக்தர்களுக்காக, தங்குமிடத்தை இலவசமாக வழங்கி வருகிறது. காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களுக்கு அன்றாடம் நுாற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூர் பக்தர்களை குறிவைத்து, அதிக கட்டணங்களை வசூலிக்கும் விடுதிகள், காஞ்சிபுரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் நகராட்சி சார்பிலும், பக்தர்கள் தங்க போதுமான வசதிகள், நகரில் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளால், தனியார் விடுதிகளில் தங்க அதிக கட்டணங்களை பக்தர்கள் கொடுத்து தங்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற அடிப்படை பிரச்னைகள் நீடித்து வரும் காஞ்சிபுரம் நகரில், மூன்று நாட்கள், இலவசமாக தங்கி, காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட, இலவச விடுதி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. காஞ்சிபுரம் நகரில், சர்வதீர்த்த குளம் அருகே உள்ள குஜராத்தி சத்திரத்தின் பின்புறம் இந்து தர்ம சத்திரம் என்ற பெயரில், இந்த விடுதி செயல்பட்டு வருகிறது. திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களும், காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களை வழிபட வரும் பக்தர்களும், இந்த விடுதியில் தங்கி செல்கின்றனர்.
புனித மற்றும் பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்திற்கு வருகை தரும் பக்தர்கள், இந்த வசதியை பயன்படுத்திகொள்ள, விடுதி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர். அரசு தரப்பில் கூட, போதுமான விடுதி வசதிகளை ஏற்படுத்தி தராத நிலையில், பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த சேவை, அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தயாராக இருக்கிறது இலவச விடுதி:விடுதியில் தங்க வரும் பக்தர்களிடம், ஒரு ரூபாய் கூட, கட்டணமாக நாங்கள் வசூலிப்பதில்லை. ஒரு சேவை மனப்பான்மையோடு, இந்த விடுதியை நடத்தி வருகிறோம். பல வெளியூர் பக்தர்கள், வந்து தங்கி இந்த விடுதியை பயன்படுத்திக்கொள்கின்றனர். இருந்தபோதும், பிற மாவட்ட பக்தர்களும், இந்த விடுதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். கே.மலர்க்கொடி, விடுதி நிர்வாகி, காஞ்சிபுரம்
3 நாட்கள் தங்கலாம்:சர்வதீர்த்த குளம் அருகே, சற்று ஒதுக்குப்புறமாக செயல்படும் இந்த விடுதி பற்றி, வெளியூர்வாசிகள் பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதிகபட்சம் மூன்று நாட்கள் இந்த விடுதியில் தங்க அனுமதி வழங்கப்படுகிறது. பொருட்கள் வழங்க தனி அறைகள்; கழிப்பறை; வாகன நிறுத்தம்; குடிநீர் மற்றும் உணவு என இலவசமாக வழங்கப்படுகிறது. - நமது நிருபர் -