திண்டுக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலம்
திண்டுக்கல், திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
இதில் மாவட்ட தலைவர் செந்தில் வேல், தென்மண்டல தலைவர் தர்மா, மாநில மகளிரணி தலைவி நிர்மலா மாதாஜி பங்கேற்றனர். நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் 37 சிலைகள் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திண்டுக்கல் கோட்டை குளத்தில்கரைக்கப்பட்டது.
பழநி: விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு பழநியில் சிவசேனா அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பழநி நகர், கிராமப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 56 விநாயகர் சிலைகள் பாதவிநாயகர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து தேரடி தெப்பம் வரை விநாயகர் சிலைகள் ஊர்வலம் சென்றது. அதன்பின் சண்முகநதியில் சிலைகள் கரைக்கப்பட்டன. மாநில அமைப்பாளர் தங்கமுத்து கிருஷ்ணன், இளைஞரணி தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அசோக்பாபு, செயலாளர் கனிவளவன், இளைஞரணி தலைவர் ஸ்ரீதர் பங்கேற்றனர். நுாற்றுக்குமேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எரியோடு: எரியோட்டில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. எரியோடு பஸ் ஸ்டாப் பகுதியில் துவங்கிய ஊர்வலம் மீனாட்சிபுரம், கரூர் ரோடு, அய்யலுார் ரோடு, வடமதுரை இணைப்பு ரோடு வழியே திண்டுக்கல் நால்ரோடு சந்திப்பிற்கு வந்தது. ஊர்வலத்தில் பொதுமக்கள் ஆங்காங்கே காத்திருந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் வேடசந்துார் குடகனாற்றில் எடுத்து செல்லப்பட்டு அங்கு கரைக்கப்பட்டது. ஏற்பாட்டினை ஜெயசந்திரன், குமார், மூர்த்தி உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.