புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
புதுச்சேரி: புதுச்சேரியில் 150க்கும் மேற்பட்ட பெரிய விநாயகர் சிலைகள், 10 ஆயிரம் சிறிய விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.
புதுச்சேரியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இடங்களில், பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். ஐந்தாம் நாளான (செப்.,9) இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. மாலை சாரம் அவ்வை திடலில் விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது.
காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாக, மேளதாளம் முழங்க கடற்கரைக்கு ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. பக்தர்கள் முகங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஆடிப்பாடி வந்தனர். பழைய நீதிமன்ற வளாகம் எதிரே ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. இதேபோல் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிறிய சிலைகளை பொதுமக்கள் கடற்கரையில் வைத்து பூஜை செய்து கடலில் கரைத்தனர். 150 பெரிய விநாயர் சிலைகளும், 10,௦00 சிறிய சிலைகள் கரைக்கப்பட்டன. கடற்கரையில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்வதற்கு வசதியாக, கடற்கரை பகுதியில், மணல் கொட்டப்பட்டு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்படும் போது, சிலைகளுடன் மாலைகளும் கடலில் கலந்து மாசு ஏற்படுத்தியது.
இந்தாண்டு தன்னார்வலர்கள், மாலைகளை பெற்று, கடலில் மாசுபாடு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். சிலை கரைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விஜர்சன ஊர்வலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு, பொது செயலாளர் சனில்குமார்,செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.