உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் கோபுரம் முன் கால்நடைகள்!

ராமேஸ்வரம் கோயில் கோபுரம் முன் கால்நடைகள்!

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள் அமைக்காமல், கடந்த 400 ஆண்டுகளாக  அடித்தளம் அமைந்த நிலையில் மொட்டை கோபுரமாக காட்சியளித்தது. 2015ல் சிருங்கேரி சுவாமிகள், நன்கொடையாளர் மூலம் இரு  கோபுரத்திற்கு திருப்பணிகள் முடிந்து, கடந்த ஜன. 20ல் கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகள் பக்தர்கள் பயன்பாடின்றி மூடி கிடந்த  இரு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் சென்று தரிசிக்க பயன்பாட்டிற்கு வரும் என, பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கோயிலுக்கு  பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால், பாதுகாப்பு காரணம் காட்டி புதிய கோபுர வாசல் வழியாக பக்தர்கள் செல்ல போலீசார்  அனுமதிக்கவில்லை. இதனால், இரு கோபுர வாசலும் பயன்பாட்டிற்கு வராமல், மீண்டும் மூடியே கிடக்கிறது.  புதிய கோபுர வாசலில்  பணிபுரியும் போலீசார், பக்தர்களை கிழக்கு, மேற்கு வாசல் வழியாக கோயிலுக்கு செல்ல வழிகாட்டுகின்றனர். இதனால், பக்தர்கள் புதிய  கோபுர வாசலில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி, மாற்று வாசலில் செல்கின்றனர். கால்நடைகளின் புகலிடம்      பக்தர்களுக்கு பயன்படாத புதிய கோபுர வாசல் ஆடு, மாடு, நாய்களின் புகலிடமாக உள்ளது. இவை அவ்வழியாக செல்லும் பக்தர்கள்,  சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக உள்ளன.  இவைகளுக்கு பயந்து ஓடும் பக்தர்கள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே,  புதிய கோபுர வாசலில் முகாமிடும் கால்நடைகளை அகற்றி, இரு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் செல்ல இந்து அறநிலையத்துறை,  காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !