செல்வ விநாயகர் கோவில் நவராத்திரி அன்னதான விழா
அன்னூர் : சொக்கம்பாளையம் செல்வவிநாயகர் கோவில் அன்னதான விழா துவங்கியது. இக்கோவில் 44வது ஆண்டு நவராத்திரி விஜயதசமி அன்னதான விழா கணபதி ஹோமத்துடன் 27ம் தேதி துவங்கியது. கொலுபூஜையை கண்ணம்மாள் துவக்கி வைத்தார். கோட்டைபாளையம், திருமலை செட்டிபுதூர் திருவேங்கடப்பெருமாள் குழு பஜனை நள்ளிரவு வரை நடந்தது. திருவிளக்கு வழிபாடு, சிறப்பு பஜனை 30ம் தேதி இரவு நடக்கிறது. புலவர் ராம குப்புலிங்கம் குழு தலைமையில், "பக்தி நெறியிலும், இல்லற நெறியிலும் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களா? பெண்களா? என்னும் தலைப்பில், பட்டிமன்றம் அக்.,2ம் தேதி இரவு நடக்கிறது. "வள்ளலார் வாழ்வும், வாக்கும் என்னும் தலைப்பில், புலவர் பொன்னம்மாள் சொற்பொழிவு 3ம் தேதி இரவு நடக்கிறது. தேசிய வித்யாசாலை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் 4ம் தேதி இரவு நடக்கிறது. அம்மன் அழைப்பு, நாட்டிய நிகழ்ச்சி 5ம் தேதி மாலை நடக்கிறது. அக்., 6ம் தேதி காலை காந்தி சிலைக்கு மாலையணிவித்தல், தேவணாபுரம் குழுவின் பஜனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டி நடக்கிறது. இரவு சுவாமி திருவீதியுலா, காரமடை தாசபளஞ்சிக சங்க திருப்பாவை குழுவுடன் பஜனை மற்றும் பிருந்தாவன நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.