சென்னையில் நவராத்திரி கைவினை கண்காட்சி
சென்னை: சென்னையில் நடந்து வரும், ‘நவராத்திரி கைவினை விழா’ எனும் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் உருவாக்கிய கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கைவினை கலைஞர்களின் உற்பத்தி பொருட்களை, லாப நோக்கின்றி சந்தைப்படுத்தும் தன்னார்வ அமைப்பு சார்பில், ‘நவராத்திரி கைவினை விழா’ எனும் விற்பனை கண்காட்சி, சென்னை, ஆழ்வார்பேட்டை, சங்கரா ஹாலில் துவக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம், ம.பி., குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த கொலு பொம்மைகள், கைவினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, பிள்ளையார்பட்டி விநாயகர், சங்கீத மும்மூர்த்திகள், ராமர் பட்டாபிஷேகம், மீனாட்சி திருமணம், இசை விநாயகர்கள் உள்ளிட்ட பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. கைவினை பொருட்கள், கைத்தறி ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்டவை அலங்கரிக்கும் இக்கண்காட்சியில், 500 ரூபாய் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான பொருட்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை முன்னிட்டு, கைத்தறிகளுக்கு, 20 சதவீத தள்ளுபடியும்; கைவினை பொருட்களுக்கு, 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அக்., 2ம் தேதி வரை நடத்தப்படும் கண்காட்சிக்கு, காலை, 10:00 முதல் இரவு, 8:30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.