மழை வேண்டி அணைக்கோவிலில் சங்காபிஷேகம்
ADDED :3303 days ago
பவானிசாகர்: பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து, அணையில் நீர் மட்டம் உயர வேண்டும் என, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாய சங்கத்தினர்,நேற்று அணை நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள சாகர் சக்தி விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்கு வைத்து சங்காபிஷேகம் நடத்தினர். இதையொட்டி நடந்த யாக பூஜையில் விவசாயிகள் பங்கேற்று மழை பெய்ய வேண்டி வழிபட்டனர். சங்கத் தலைவர் காசியண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி உட்பட, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். நேற்றைய நிலவரப்படி, அணை நீர்மட்டம், 53.52 அடி, நீர்வரத்து, 207 கன அடியாக இருந்தது. குடிநீருக்காக பவானி ஆற்றில், 150 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில், ஐந்து அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. நீர் இருப்பு, 5.3 டி.எம்.சி.,யாக உள்ளது.