உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் புதிய கொடிமரம் அமைக்கும் பணி துவக்கம்!

சபரிமலையில் புதிய கொடிமரம் அமைக்கும் பணி துவக்கம்!

சபரிமலை: சபரிமலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக, பம்பையில் மரம் செதுக்கும் பணி துவங்கியது. சபரிமலையில், தற்போதுள்ள கொடிமரம் பழுதாகி காணப்படுவதால், புதிய கொடிமரம் அமைக்க, தேவசம் போர்டு முடிவு செய்தது. இதற்காக, புதிய தேக்கு மரம் வெட்டப்பட்டு, பம்பை எடுத்து வரப்பட்டது. நேற்று, இந்த மரத்தை செதுக்குவதற்கான பணிகள் துவங்கின. மரத்தை உருட்டி செதுக்கி முடிந்த பின், பச்சிலை மருந்துகள் கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்படும். இதற்காக, 42 அடி நீளமும், 2 அடி அகலத்திலும் எண்ணெய் தோணி தயாராகிறது.

மரத் தின் நீளம், 40 அடி. எண்ணெயில், 32 வகை பச்சிலை மருந்து சேர்க்கப் படும். அக்., 20-ல், தோணியில் மரம் போடப்படும். பூஜைகளில் மாற்றம்: சபரி மலையில், புதிய தங்க கொடிமரம் அமைப்பது, அதற்கான முகூர்த்தம் நிச்சயிப்பது தொடர்பாக, தாம்பூல பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில், சில தோஷங்கள் உள்ளன; அதற்கு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என, கூறப்பட்டது. அதன்படி, தற்போது சபரிமலையில் பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. அய்யப்பன் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் விக்கிரகங்களுக்கு, 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், அஷ்டபந்தன கலசம், அக். 20ல் நடைபெறும். இதற்காகவும், ஐப்பசி மாத பூஜைகளுக்காகவும் சேர்த்து, அக்., 16 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும். 20ம் தேதி அதிகாலை, 4:40 மணிக்கும், 6:00 மணிக்கும் இடையிலான முகூர்த்தத்தில் அஷ்டபந்தன கலசம் நடைபெறும். இதையொட்டி, அக்., 20, 21ல் நெய்யபிஷேகம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !