திருத்தணி முருகன் கோவிலில் 27 நாட்களில் உண்டியல் வசூல் ரூ.42 லட்சம்
திருத்தணி:முருகன் கோவிலில் கடந்த 27நாட்களில்,பக்தர்கள் 42 லட்சம் ரூபாய் ரொக்கமும், 700 கிராம் தங்கமும் உண்டியலில் காணிக்கையாக அளித்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற ரொக்கம்,தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் அளிக்கின்றனர்.இதை மாதந்தோறும், கோவில் ஊழியர்களால் மலைக்கோவில் வளாகத்தில் எண்ணப்படுகிறது. இதே போல் கடந்த மாதம் 27ம் தேதி முதல் இம்மாதம், 23ம் தேதி வரை பக்தர்கள் உண்டியலில் அளித்த காணிக்கையை கோவில் இணை ஆணையர் கவிதா முன்னிலையில் வள்ளி மண்டபத்தில், ஊழியர்கள் மற்றும் பக்தர்களால் எண்ணப்பட்டது.இதில் 27 நாட்களில், 41 லட்சத்து 59 ஆயிரத்து 920 ரூபாய் ரொக்கமும், 698 கிராம் தங்கம், 2 கிலோ 326 கிராம் சில்வர், 13 கிலோ 820 கிராம் தகடு, மூன்றரை கிலோ பித்தளையும், பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தனர்.