நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.24.62 லட்சம் காணிக்கை
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 24.62 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு, பல்வேறு மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக, உண்டியலில் தங்கம், வெள்ளி நகை மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த காணிக்கை, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை திறந்து, அறநிலையத்துறை கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ரூபாயை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 24 லட்சத்து, 62 ஆயிரத்து, 332 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. மேலும், 40 கிராம் தங்கம், 61.400 கிராம் வெள்ளி நகையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.