அடைக்கலாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா!
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் 10நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடந்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் துவங்கியது. முன்னதாக நவநாள் திருப்பலி நடந்தது. நெல்லை வீரவநல்லூர் பங்கு தந்தை ஜோக்கிம் மறையுரை வழங்கி கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டியன்பட்டணம் பங்கு தந்தை ஜோசப் மற்றும் அடைக்கலாபுரம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி தினமும் காலை திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். வருகின்ற 6ம் தேதி ஒன்பதாம் திருநாளன்று நவநாள் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் சாண்டகை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடக்கும். இரவு 9 மணிக்கு அதிசய ஆரோக்கிய அன்னையின் சப்பரபவனி நடக்கும். வருகின்ற 8ம் தேதி மதியம் ஊர் பொது அன்பு விருந்து நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன்ராஜ் மற்றும் சிஸ்டர்கள், விழாக்குழுவினர்கள், அன்பு இறைமக்கள் செய்து வருகின்றனர்.