மைசூரு தசரா ஊர்வலத்திற்கு தங்க சிம்மாசனம் தயார்
மைசூரு: தசரா ஊர்வலத்திற்கு, மைசூரு அரண்மனை தர்பார் ஹாலில், வைரம், தங்கம், ரத்தினம், வெள்ளியால் ஆன சிம்மாசனம், நேற்றே தயாரானது.
ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின்போது, அரண்மனை பாதுகாப்பு அறையில், 13 பாகங்களாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் தங்க சிம்மாசனம், வெளியே எடுக்கப்பட்டு முழு உருவம் பெறும். இந்தாண்டு, நேற்று காலை, தர்பார் ஹாலுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிம்மாசனம் கொண்டு வரப்பட்டது. அதிகாலை, 6:00 மணிக்கு, அரண்மனை ராஜ புரோகிதர் சியாம் ஜோயில், அரண்மனை தர்மாதிகாரி ஜதார்த்தன அய்யங்கார், புரோகிதர் நரசிம்மன் முன்னிலையில் ஹோமம், பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 8:20 மணியிலிருந்து, 9:48 மணிக்குள், துலாம் லக்னத்தில் சிம்மாசனம் பொருத்தும் பணி துவங்கப்பட்டது. இப்பணி, மதியம், 12:00 மணி வரை நடந்தது.
சிம்மாசனம் நேற்று ஜோடிக்கும்போது, ராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி, கலெக்டர் ரனதீப், போலீஸ் கமிஷனர் தயானந்த், டி.சி.பி.,க்கள் சேகர், ருத்ரமுனி, அரண்மனை பாதுகாப்பு பணி அதிகாரி ஷைலேந்திரா, அரண்மனை நிர்வாக துணை இயக்குனர் சுப்பிரமணியம் உட்பட பலர் இருந்தனர்.