உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக வரலாற்றை மறைக்க... முயற்சி? கீழடி அகழாய்வை தொடர்வதில் சிக்கல்!

தமிழக வரலாற்றை மறைக்க... முயற்சி? கீழடி அகழாய்வை தொடர்வதில் சிக்கல்!

கீழடி அகழாய்வு பொருட்களை, பெங்களூருக்கு எடுத்து செல்ல, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், அடுத்தகட்டஅகழாய்வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகர் நாகரீகம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில், இந்தியதொல்லியல் துறை, இரண்டு ஆண்டுகளாக, இரண்டு கட்ட அகழாய்வுகளை நடத்தி உள்ளது.இதில், கிடைத்த பொருட்கள், பெங்களூரு, தென்னக கிளை அலுவலகத்தில், பாதுகாக்கப்பட உள்ளது. ஆனால், கீழடியில், கள அருங்காட்சியகம் அமைத்து, பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வழக்கறிஞர் கனிமொழி தொடர்ந்த வழக்கில், பொருட்களை எடுத்துச் செல்ல, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. இது, அகழாய்வுக்கு சிக்கலை ஏற்படுத்திஉள்ளது. இது குறித்து,தொல்லியல் ஆய்வாளர் கள் கூறியதாவது: இந்திய தொல்லியல் துறையும்,

வடமாநில வரலாற்று ஆய்வாளர்களும், தென்மாநில வரலாற்றை புறக்கணிக்கின்றனர். 2001ல் தான், தொல்லியல் துறையின், தென்னிந்திய கிளை,பெங்களூரில் துவங்கியது. 15 ஆண்டுகளில், இரண்டு இடங்களில் தான் அகழாய்வுகள் நடந்துள்ளன.கீழடி அகழாய்வு, 2,000 ஆண்டுகள் பழமை யான, நகர நாகரிக சான்றாக அமைந்தது.

பதிலுக்கு காத்திருப்பு: இது, வடமாநில வரலாற்று ஆய்வாளர்களுக்கு பிடிக்கவில்லை; கடந்த கால, தமிழக வரலாற்று முடிவுகளை ஆவணப்படுத்தவும், ஒத்துழைக்கவில்லை. கர்நாடகாவுடன், காவிரி பிரச்னை உள்ள தால், கீழடியில் கள அருங்காட்சியகம் அமைப்பதே சிறந்தது; அதுவரை, தற்காலிக இடத்தில், பொருட்களை பாதுகாக்க, தொல்லியல் துறை தலைமை அனுமதிக்க வேண்டும். உயர் நீதிமன்ற இடைக்காலதடையை காரணம் காட்டி, தலைமையகம், கீழடி அகழாய்வையே நிறுத்தி, தமிழரின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர். இது குறித்து, சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர், ஸ்ரீலட்சுமி கூறுகையில், நீதிமன்ற இடைக்கால தடை குறித்து, டில்லி, தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதி உள்ளோம்; பதிலுக்காக காத்திருக்கிறோம், என்றார்.

அட்டையடியில் இடம் கிடைக்குமா?

கீழடியில், கள அருங்காட்சியகம் அமைக்க, இரண்டு ஏக்கர் நிலம் தேவை. மாநில அரசு, பள்ளிச்சந்தை பகுதியில் ஒதுக்கும், 72 சென்ட் நிலம் போதாது; அதிலும், பல ஆக்கிரமிப்புகள் உள்ளன என, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மதுரை - ராமேஸ்வரம் நான்குவழி சாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள, அட்டையடியில், 50 ஏக்கர் நிலம் உள்ளதால், அதில், இரண்டு ஏக்கரை ஒதுக்கலாம் என, கிராம மக்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !