ராமநாதபுரம் அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
ராமநாதபுரம்: மண்டபம் ஓடைத்தோப்பு சந்தன பூமாரி அம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா செப்., 27ல் காப்பு கட்டு, முத்து பரப்புதலுடன் துவங்கியது. தினமும் இரவு முருகானந்தம், செந்திவேல் குழுவினரின் ஒயிலாட்டம் நடந்தது. அக்., 4 இரவு 11:00 மணிக்கு அம்மன் கரகம் கடற்கரையில் இருந்து கோயிலை வந்தடைந்தது. நேற்று காலை பக்தர்கள் தென் கடற்கரை சென்று அலகு குத்தி, பால்குடம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மன் கரகம் பக்தர்கள் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கடலில் கரைத்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் நாராயணன், ஆறுமுகம், துரைக்கண்ணு, பூவேந்திரன், கவுன்சிலர் நாகராஜன், முத்திருளாண்டி உள்ளிட்டவர்கள் செய்தனர். மண்டபம் ஆசாரி தெரு ஆதி முத்து மாரியம்மன், மீனவர் காலனி குங்கும மாரி அம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில்களில் அக்., 12ல் குளுமை பொங்கல் விழா நடக்கிறது.