திருப்பரங்குன்றம் கோயில் தரிசனத்தில் பாகுபாடா? கலெக்டர் ஆய்வு செய்ய உத்தரவு!
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், இலவச தரிசன முறையை பயன்படுத்தும் ஏழை பக்தர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக, பக்தர் ஒருவர் எழுதிய கடிதம் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,மதுரை கலெக்டர் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டது. விஸ்வநாதன் என்ற பக்தர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு எழுதிய கடிதம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வழிபாடு நடத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. குடவரை பகுதியில் முருகன், விநாயகர், துர்க்கையம்மன் சுவாமி சிலைகள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. குடவரையின் இடது, வலது புற பகுதியில் சிவன், திருமால் சுவாமி சிலைகள் உள்ளன. இலவச தரிசனத்தில் செல்வோர் முருகன், விநாயகர், துர்க்கையம்மனை தரிசிக்க முடியும். சிவன், திருமாலை பார்க்க, தரிசிக்க முடியாது.
சிறப்பு தரிசன கட்டணத்தில் செல்வோர் முருகன் உட்பட 5 கடவுள்களை வழிபடலாம். இலவச தரிசன முறையை பயன்படுத்தும் ஏழை பக்தர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன கட்டணத்தில் செல்வோருக்கு, சம வாய்ப்பு அளிக்க வேண்டும். சிறப்பு தரிசன கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். அனைத்து பக்தர்களும் இடையூறின்றி வழிபாடு நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார். இதை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு முன், உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) இளங்கோவன் சமர்ப்பித்தார். இதனடிப்படையில் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் ஏற்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் செல்லத்துரை ஆஜரானார். கோயில் கர்ப்பகிரகத்திலிருந்து எந்தெந்த பாதை வழியாக பக்தர்களை அனுமதிப்பது மற்றும் இடவசதியை விளக்கும் வரைபடத்தை சமர்ப்பித்தார். நீதிபதிகள்: இலவச தரிசனம் மற்றும் கட்டண முறையை பயன்படுத்துவோர் என யாரையும் புறக்கணிக்காமல், அனைவரும் சிரமமின்றி தரிசிக்கும் வகையில், வழித்தடம் ஏற்படுத்துவது பற்றி கோயில் பொறியாளர் மற்றும் அதிகாரிகளுடன் மதுரை கலெக்டர், கோயிலை ஆய்வு செய்து, நாளை (அக்.,7) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.