சபரிமலை செல்லும் பக்தர்கள் புகைப்படத்தை வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்ப முடிவு!
மூணாறு, புல்மேடு வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களை புகைப்படம் எடுத்து வாட்ஸ் -ஆப் மூலம் சன்னிதானத்தில் செயல்படும் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்ப, இடுக்கி கலெக்டர் கோகுல் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இடுக்கி மாவட்டம் குமுளி,பீர்மேடு,குட்டிக்கானம், முண்டகயம் வழியாக வாகனங்களிலும்,வண்டிபெரியாறு, சத்திரம்,புல்மேடு வரையிலும் வாகனங்களில் சென்று, இங்கிருந்து வனத்தின் வழியாக நடந்தும் சபரிமலைக்குச் செல்லலாம். சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் நெருங்குவதால், இடுக்கி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு கடந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கோகுல் தலைமையில் நடந்தது. இதில் எஸ்.பி., ஜார்ஜ், மக்கள் பிரதிநிதிகள் , அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எஸ்.பி., உறுதியளித்தார். பருந்துபாறையில் நடைபாதைகளில் கூடுதல் பாரிகேட் அமைக்கவும், புல்மேட்டில் கடைகள் வைக்க தடை விதிக்கவும், புல்மேடு வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களை பாதுகாப்பு கருதி புகைப்படம் எடுத்து வாட்ஸ்- ஆப் மூலம் சன்னிதானத்தில் செயல்படும் கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
சுகாதார மையங்கள்: சத்திரம் பகுதியில் கூடுதல் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்துவதற்கு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்களின் தகவல்களை போலீசார் சேகரித்து சோதிப்பர். வனத்தினுள் கடந்து செல்லும் பாதையில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும்.சுகாதார மையங்கள் குறித்து முக்கிய பகுதிகளில் அறிவிப்பு போர்டுகள் வைக்கப்படும். வள்ளக்கடவு,கோழிக்கானம் வழித்தடத்தில் போதிய அளவில் கேரளா அரசு பஸ்கள் இயக்கப்படும். புல்மேட்டில் பி.எஸ்.என்.எல்., சார்பில் அலைபேசி இணைப்புக்கு தற்காலிக டவர் அமைக்கப்படும்.இதில் இன்டர் நெட் வசதி ஏற்படுத்தப்படும். இதேபோல் பிற அலைபேசி நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்துவதற்கு உறுதியளிக்க வேண்டும் உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.