உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையில் விடிய விடிய நடந்த சக்தி தரிசனம்!

நெல்லையில் விடிய விடிய நடந்த சக்தி தரிசனம்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தசரா விழாவின் நிறைவாக விடிய விடிய நடந்த சப்பர பவனி, சக்தி தரிசன நிகழ்ச்சியினால், நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டது.

தசரா விழா என்றால் மைசூர் தான் நினைவிற்கு வரும். தென்னகத்தில் திருநெல்வேலியில் நடக்கும் தசரா விழாவும் பிரசித்தி பெற்றவை. திருநெல்வேலி நகரில் துர்க்கை அம்மன், மாரியம்மன், சுந்தராட்சி அம்மன், முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், தங்கம்மன், அறம்வளர்த்த நாயகி அம்மன், பிட்டாபுரத்தி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், துர்க்கை அம்மன் உள்ளிட்ட 23 அம்மன்களின் சக்தி தரிசன விழா நேற்று இரவு துவங்கி காலை வரையிலும் நடந்தது. நெல்லையப்பர் கோயில் பெரியதேர் திடலில் அணிவகுத்த சப்பரங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக ரிஷப வாகனத்தில் நெல்லையப்பரும், தனுசு வாகனத்தில் காந்திமதி அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதே போல பாளை.,பகுதியிலும் உச்சினிமகாளி, தேவி மாரியம்மன், முப்பிடாதி உள்ளிட்ட 27 அம்மன்கோயில்களில் இருந்து சப்பர பவனி நடந்தது. நேற்று காலையில் ராமசாமி கோயில் முன்பாக சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து இரவில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது. விடிய விடிய நடந்த சப்பர பவனியின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நெல்லை போலீஸ் கமிஷனர் திருஞானம் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !