வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா கோலாகலம்!
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழாவில் ஏராளமான கிராமத்தினர் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்றது முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா.
மழைக்கு அதிபதியாக உள்ள இந்த அம்மனுக்கு இப்பகுதி மக்கள் புரட்டாசி மாதம் விழா எடுத்து வழிபடுவது வழக்கம். இப்பகுதி சகல வளங்களுடன் செழிப்பாக இருப்பதற்கு முத்தாலம்மன்தான் காரணம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. அதற்காக இவ்விழா கொண்டாடுகின்றனர். நுõறாண்டுகளுக்கு மேல் பாரம்பரிய சிறப்பு கொண்ட இவ்விழா அக்.5 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து மும்மதத்தினர் பங்கேற்புடன் கலைவிழா நடந்தது. இயல், இசை, நாட்டியம் அடங்கிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
தேரோட்டம்: ஏழாம் நாளான அக்12ல் தேரோட்ட விழா விமரிசையாக நடந்தது. அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் தேர் வீதியுலா துவங்கியது. ரதவீதிகள் வழியாக தேர் செல்லும்போது பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். வீதியுலா முடிந்து மதியம் 12.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அங்கிருந்து அம்மன் தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பக்தர்கள் மஞ்சள் நீராட்டு விழாவும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.
பிரியாவிடை: இந்த அம்மனுக்கு உருவ வழிபாடு கிடையாது. கோயிலில் வெறும் பீடத்திற்கு மட்டுமே வழிபாடு நடக்கும். தேரோட்டத்தன்று ஒருநாள் மட்டும் உருவமாய் காட்சியளிப்பார். முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைந்து விடுவார். அதற்காக அம்மனை நீரில் கரைத்து விடுவார்கள். அதற்கு முன் அம்மன் பக்தர்களுக்கு பிரியாவிடை கொடுத்து புறப்படும் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. அம்மன் மேளதாளங்கள் முழங்க கோயிலை மூன்று முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு பிரியாவிடை அளித்தார். பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிநெடுக நின்று பூக்களை தூவி அம்மனை வழியனுப்பி வைத்தனர். கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன், தக்கார் ராமராஜா அறநிலையத்துறையினர் திருவிழா ஏற்பாடுகளையும், பக்தசபா செயலாளர் விவேகானந்தன், தலைவர் சுந்தர்ராஜப்பெருமாள், மகாலிங்கம், ராமச்சந்திரன் உட்பட நிர்வாகிகள் கலைவிழா ஏற்பாடுகளையும் செய்தனர்.