திருப்புல்லாணி பெருமாள் கோயில் தெப்பக்குளம் தடுப்புச்சுவர் சேதம்
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் தடுப்பு சுவர் இடிந்துவிழுந்துள்ளதால் மழை பெய்தால் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்கதும், வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதுமான திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினமும் வந்துசெல்கின்றனர். இவர்கள் கோயில் முன்புறம் உள்ள அக்னிதீர்த்த தெப்பக்குளத்தில் புனித நீராடிய பின்னரே கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட தெப்பக் குளத்தை சுற்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2007ல் 25 லட்சம் ரூபாய் செலவில் 12 அடி உயரம் கொண்ட தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தெப்பக்குளத்தின் வடக்குபுறத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச்சுவர் 50 அடி வரை இடிந்து விழுந்துள்ளது. மீதமுள்ள சுவரும் இடியும் தருவாயில் உள்ளது.இதனால் மழை பெய்தால் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியில் மீண்டும் தடுப்பு சுவர் எழுப்ப இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணன் கூறுகையில்,“ மழைநீரால் நிரம்பும் அக்னிதீர்த்த தெப்பக்குளத்தின் வடக்குப்பகுதி பக்கவாட்டு சுவர் இடிந்துவிழுந்து ஆண்டுகள் பல கடந்தும் சீரமைக்கப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது. குளத்தை சுற்றி புதிதாக தடுப்புச்சுவர் எழுப்ப இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.