திருவண்ணாமலை ராஜகோபுர விரிசல் சீரமைப்பு நிறைவு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் ஏற்பட்டிருந்த விரிசல், சரி செய்யப்பட்டு விட்டது என, கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கிழக்கு ராஜகோபுரத்தின் உத்திரக்கல்லில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லண்டனை தலைமையிடமாக கொண்ட சின்டெக் இண்டர்நேஷனல் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் விரிசலை சரி செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, கடந்த, 6ம் தேதி விரிசலை சீரமைக்கும் பணி துவங்கியது. தொடர்ந்து கடந்த, 8ம் தேதி ஐ.ஐ.டி., சென்னை தொழில்நுட்ப கல்லூரியின் உதவி பேராசிரியர் சத்யதிரிக் சர்மா, ஹரிஷ் ஹரிதாசன், மற்றும் கிரிசல் ஆரான்ஹா ஆகியோர் மேற்பார்வையில், முதுநிலை ஆர்க்கியாலஜிஸ்ட் மகேஸ்வரி அறிவுரையின் படி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விரிசலை சரி செய்யும் பணி, கடந்த, 10 ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.