காஞ்சிபுரம் சுவாமி குடை: வெளிநாட்டிலும் பாரம்பரியத்தை பரப்புகிறது!
காஞ்சிபுரம் : கோவில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போது, திருவிழாவை மேலும் சிறப்பு செய்வது, சுவாமி தலைக்கு மேல் பிடிக்கும் அழகிய குடை தான். காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் சுவாமி குடைகள் பல நாடுகளுக்கு சென்று, நம் பாரம்பரிய பெருமையை பிரதிபலிக்கின்றன. காஞ்சிபுரம் மட்டுமல்ல, நாட்டின் பல மாநிலங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களுக்கு காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட சுவாமி குடைகளை வாங்கி செல்கின்றனர். அதுபோல, உலகின் பல நாடுகளில் நடக்கும் கோவில் திருவிழாக்களுக்கும் இங்கிருந்துசுவாமி குடைகள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
கோவில்களின் பிரமோற்சவம் போன்ற விழா காலங்களில், திறந்த வெளியில் சுவாமி அல்லது அம்மன் வீதி உலா செல்லக்கூடாது என்பது ஆகம விதியாக உள்ளது. அதனால், சுவாமி புறப்பாடு நடக்கும் போது, சுவாமிக்கு மேல் குடை ஏந்தி செல்வது வழக்கமாக இருக்கிறது.விழாக்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த குடைகளை, காஞ்சிபுரத்தில் குறிப்பிட்ட சிலர், ஐந்து தலைமுறைகளாக செய்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கு, பெருமாளுக்கு வெண்பட்டு மற்றும் அம்மனுக்கு மஞ்சள் பட்டு குடை தயாரிக்கப்படுகிறது.
ஐந்து தலைமுறைகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். கார்த்திகை, மார்கழி, தை, மாதங்களில் அதிகமாக விழாக்கள் இல்லை என்பதால் தொழிலும் இருக்காது. மற்ற மாதங்களில் ஆர்டர் வரும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆண்டு தோறும் நடக்கும் பிரமோற்சவம் மற்றும் கருட சேவைக்கு நாங்கள் தான் குடை செய்து தருகிறோம். ஒரு குடை நன்றாக பராமரித்தால், 30 ஆண்டுகள் வரை இருக்கும். நாங்கள் செய்து கொடுத்த குடையுடன் பெருமாள் வருவதை பார்க்கும் போது எங்களுக்கு திருப்தியாக இருக்கும். கே.ராமச்சந்திரன், சுவாமி குடை தயாரிப்பாளர், காஞ்சிபுரம்
குடையின் அளவு: சுவாமி குடைகள், 4.5 அடி அகலம் முதல் 5, 6, 7.5, 9, 10, 12, 14.5 அடி அகலம் வரை செய்யப்படுகின்றன. இதை செய்ய, கேரளாவில் இருந்து மூங்கில் வாங்கி வந்து, குடை அளவுக்கு தகுந்த அளவில் வெட்டி, குச்சிகளாக்கி அதில் வசம்பு, மஞ்சள், வேப்ப எண்ணெய் ஆகியவை கலந்து தடவி, தீயில் காட்டி அதன் பின் அதை பயன்படுத்துவதால் நீண்ட காலம் நீடிக்கிறது. பட்டு துணி, காட்டன் காடா, டிரில் துணி, வெல்வெட் துணி ஆகியவை பயன்படுகின்றன. குடையின் ஓரம், அழகுக்கு தொங்கவிடப்படும் பட்டு ஜாலர், குடைக்கு கூடுதல் அழகு சேர்கிறது. ஒவ்வொரு குடைக்கும் அதற்கு தகுந்த விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. அதிக பட்சமாக, 14.5 அடி அகலம் கொண்ட குடைக்கு, 45 ஆயிரம் ரூபாய் விலை.