உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூரு தசரா யானைகளுக்கு டாட்டா : முகாம்களுக்கு திரும்பின

மைசூரு தசரா யானைகளுக்கு டாட்டா : முகாம்களுக்கு திரும்பின

மைசூரு: மைசூரு தசரா உற்சவத்தை வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த, அர்ஜுனா தலைமையிலான யானைகள், நேற்று தங்களின் முகாம்களுக்கு திரும்பின.உலக பிரசித்தி பெற்ற, மைசூரு தசரா திருவிழாவில் பங்கேற்க, கடந்த ஆகஸ்ட், 21ம் தேதி, அர்ஜுனா உட்பட, ஆறு யானைகள் மைசூருக்கு அழைத்து வரப்பட்டன. இவற்றின் எடையை, ஆகஸ்ட், 27ம் தேதி கணக்கிடப்பட்டது. அதன் பின், அரண்மனை வளாகத்தின், கோட்டை சோமேஸ்வரர் கோவில் அருகில், முகாமிட்டிருந்த யானைகளுக்கு, காலை, மாலையில் நெல், வெல்லம், புல், கரும்பு, ஆலமர இலை உட்பட, வகை வகையான ஊட்டச்சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.

நகர வாழ்க்கையில் பொருத்திக்கொள்வதற்காக, அவற்றுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தசரா திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமிதத்துடன், ஜம்பு சவாரி ஊர்வலத்தில், 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்து, லட்சக்கணக்கான மக்களின் பாராட்டுகளை பெற்ற, கேப்டன் அர்ஜுனா தலைமையிலான யானைகளுக்கு, நேற்று காலை மைசூரு அரண்மனையில் இருந்து வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது, யானைகளின், பாகன்கள், உதவியாளர்களுக்கு கவுரவ நிதி, விருந்து ஆகியவை, மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. முன்னதாக, யானைகளின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. கடந்த ஒன்றரை மாதமாக, ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைத்ததால், அனைத்து யானைகளின் உடல் எடையும் அதிகரித்தது தெரிய வந்தது. மைசூரு, அம்பா விலாஸ் அரண்மனை வளாகத்தில் உள்ள, தசரா யானைகளை காண, மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அம்பாரி சுமந்த, அர்ஜுனா யானையுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள, பெரும் போட்டியே இருந்தது.இதையடுத்து, யானைகள், தனித்தனி லாரிகளில் ஏற்றி, அவை ஏற்கனவே தங்கியிருந்த முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அர்ஜுனா பீதிகுட்டேவின், பள்ளே யானை முகாமுக்கும், பலராமா மத்திகோடுவின் காளிபாளையா முகாமுக்கும், அபிமன்யு மூட்கல் முகாமுக்கும், கஜேந்திரா கே.குடி முகாமுக்கும், காவேரியும், விஜயாவும் துபாரே முகாமுக்கும், இரண்டாவது குழு யானைகள் கோபி, ஹர்ஷா, பிரசாந்த், விக்ரம் துபாரே யானை முகாமுக்கும் சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !