திருவண்ணாமலை கிரிவல பாதை விரிவாக்கம்: மீண்டும் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவல பாதை விரிவாக்கப் பணியை, பசுமை தீர்ப்பாயம் நியமித்த கமிட்டி, இன்று மீண்டும் ஆய்வு செய்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை விரிவாக்கப் பணிக்காக, மரங்கள் வெட்டப்படுவதாக செய்தி வெளியானது. அதனடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, வழக்கு பதிவு செய்தது. மரங்களை வெட்டுவதற்கு எதிராக, அப்பகுதி மக்களும் வழக்கு தொடர்ந்ததால், இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன், விரிவாக்கப் பணியை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், ஓய்வு பெற்ற தலைமை வனப் பாதுகாவலர் சேகர் ஆகியோர் இடம்பெற்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, செப்., 28, 29ல், நெடுஞ்சாலை துறையினர் காட்டிய இடங்களில் மட்டுமே ஆய்வு செய்ததாக புகார் கூறப்பட்டது.இதையடுத்து, மனுதாரர்களுடன் சென்று, கிரிவல பாதையை மீண்டும் ஆய்வு செய்ய, தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, பவுர்ணமி நாளான இன்று, பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது; ஆய்வு பணிகள், வீடியோ பதிவு செய்யப்பட்டு, தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். - நமது நிருபர் -