உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் இனி ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவம் நடத்த ஆலோசனை!

திருமலையில் இனி ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவம் நடத்த ஆலோசனை!

நகரி : திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், அடுத்த ஆண்டு முதல் இரண்டு பிரம்மோற்சவ விழா நடத்த ஆலோசிக்கப்படும் என, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கே.பாபிராஜு தெரிவித்தார். திருமலையில், பாபவிநாசனம் செல்லும் வழியில், பிரம்மோற்சவத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்க் கண்காட்சியை, அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், சேர்மன் ஆகிய இருவரும் இணைந்து, நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பல நூற்றாண்டுகளுக்கு முன், நம் நாட்டை ஆண்டு வந்த மன்னர்கள் காலத்தில், ஒரு ஆண்டுக்கு பத்து பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்பட்டதாக புராண, சரித்திர ஆதாரங்கள் உள்ளன. திருமலை கோவிலில், தற்போது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டு பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவம் என, இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இனி, அடுத்த ஆண்டு முதல், உத்தராயண புண்ணிய காலம் எனப்படும், தை மாதம் முதல் (ஜனவரி 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை) ஆனி மாதம் முடிய ஒரு பிரம்மோற்சவமும், தட்சிணாயணம் எனப்படும் ஆடி மாதம் முதல் (ஆகஸ்ட் 15ந் தேதி முதல் ஜனவரி 14 ம் தேதி வரை) மார்கழி மாத முடிவுக்குள் ஒரு முறை என, ஆண்டுக்கு இரண்டு பிரம்மோற்சவ விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இதுபோன்ற பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், பக்தர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை வெங்கடேசப் பெருமாளின் வாகன சேவை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவது குறித்தும், ஆகம விதிமுறைகள் குறித்தும், வேத பண்டிதர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகளிடம் ஆலோசித்த பின், முடிவு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !