குருவாயூர் கிருஷ்ணன் கோவில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பு
குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவில் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள, கிருஷ்ணன் நம்பூதிரி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆறு மாதங்கள் இந்த பதவியில் இருப்பார். கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்), ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதேபோல், சில தினங்களுக்கு முன், புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணன் நம்பூதிரி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டார். அவர் கோவிலில் பத்து தினங்களுக்கும் மேலாக, விரதமிருந்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு அத்தாழப் பூஜை (ராக்கால பூஜை)க்கு பின், ஆறு மாதங்களாக மேல்சாந்தியாக பொறுப்பில் இருந்து வந்த கிரீசன் நம்பூதிரி தன்வசம் இருந்த சாவிக் கொத்துக்கள் அடங்கிய தொகுப்பினை (இதுதான் மேல்சாந்தி பதவிக்கான அடையாளம்), சன்னிதி முன்புள்ள நமஸ்கார மண்டபத்தில், வெள்ளிக்குடத்தின் மீது வைத்து தரிசனம் செய்து விட்டு, பொறுப்பில் இருந்து விடை பெற்றார். அதன்பின், கோவில் ஊராளன் (கோவிலில் பூஜை, ஆசாரங்களை கண்காணிப்பவர்) ராமன் நம்பூதிரி, சாவிக் கொத்துக்களை எடுத்து புதிய மேல்சாந்தியிடம் ஒப்படைத்தார். அவர் அதை பெற்றுக்கொண்டு சன்னிதிக்குள் சென்றார். அங்கு மூலவர் பாதங்களில் அவற்றை வைத்து வணங்கி, புதிய மேல்சாந்தியாக பொறுப்பேற்றார்.