மாரியம்மன், முனியப்பன் கோவில் விழா: பெருந்துறையில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3307 days ago
பெருந்துறை: பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் அருகே, கோட்டை மாரியம்மன் மற்றும் கோட்டை முனியப்பன் கோவில்கள் உள்ளன. இவற்றில் பொங்கல் திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, பெருந்துறை, மேக்கூர் பகுதி பொதுமக்கள், பவானி கூடுதுறையில் இருந்து, தீர்த்த நீர் எடுத்து வந்தனர். மேக்கூர், காமாட்சியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட தீர்த்தக்குட ஊர்வலம், பெருந்துறை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அதேபோல் மாலையில், பெரிய வேட்டுவபாளையம், தாளக்கரைப்புதூர், மடத்துப்பாளையம் பகுதி மக்கள், கூடுதுறையில் இருந்த தீர்த்த நீர் கொண்டு வந்தனர். இவர்களும் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். தீர்த்த நீரில் மாரியம்மன், முனியப்பன் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.