திருத்தணி கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஐப்பசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஐப்பசி மாதம், கிருத்திகையையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகன் பெருமானுக்கு பால், பன்னீர், விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்திருந்து, மூலவரை தரிசிக்க, பொது வழியில் மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். நேற்று, கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால், முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அதிகளவில் பக்தர்கள் மலைக் கோவிலில் குவிந்தனர்.