பண்டிகையன்று இயேசு செய்தது என்ன?
நம் வீட்டில் திருமணம், கிரகப்பிரவேசம்... இவற்றையெல்லாம் அமர்க்களமாக கொண்டாட வேண்டுமென நினைக்கிறோம். பந்தல், அலங்கார விளக்குகள், இசைநிகழ்ச்சி, பிரியாணி.. “அப்பப்பா... என் வீட்டுத் திருமணத்திற்கு சாப்பாட்டிற்கு மட்டுமே பல லட்சம் செலவழித்தேன். கச்சேரிக்கு வந்தவர் மட்டும் லட்சம் வாங்கிக் கொண்டார்... என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்று தம்பட்டம் அடிப்பதில் சிலருக்கு அப்படியொரு ஆனந்தம். ஆடம்பரமாக விழா நடந்தால் தான், விழாக் கொண்டாடிய திருப்தியே கிடைப்பதாக பலரும் எண்ணுகிறார்கள். பைபிள் யோவான் 5ம் அதிகாரத்தில், “ஊர் முழுக்க பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வேளையிலும், இயேசுநாதர் பெதஸ்தா குளத்தருகே அமர்ந்து நோயாளியைக் குணப்படுத்திக் கொண்டிருந்தார்,” என சொல்லப்பட்டிருக்கிறது. இதன் உள்ளர்த்தம் என்ன? விழாக்கள் வருவதே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான். கிறிஸ்துமஸ், ஈஸ்டர் என்று எத்தனையோ திருநாட்கள் நம் வாழ்வில் வந்துள்ளது. பல சுபநிகழ்ச்சிகளும் நம் வீட்டில் நடந்துள்ளது. அன்று எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தோம் என கணக்கு போட்டுப் பாருங்கள். நம் இல்ல விழாக்களில் விருந்துண்டவர்களில் எத்தனை ஏழைகள் இருந்தனர் என எண்ணிப் பாருங்கள். இனியாவது ஏழைகள் உயர்வடைய வேண்டும் என்பதற்காக விழாக்களை நடத்துங்கள். ஆடம்பரமாய் செலவழிக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுங்கள். விழாக்களை எளிமையாக்குங்கள்.