காரைக்குடியில் கல்லறை திருநாள்
காரைக்குடி : காரைக்குடியில் கல்லறை திருநாள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கிறார்கள். இது, கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. கல்லறை தோட்டத்துக்குச் சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றுகின்றனர். இறந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாரும் நினைக்காத ஆன்மாக்களை நினைத்து, அவர்களுக்காக கல்லறை திருநாள் அன்று வேண்டுதல் ஜெபம் செய்கின்றனர். காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்துக்கு உட்பட்ட கழனிவாசல் சந்தை அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி, கல்லறை மந்திரிப்பு நடந்தது. அரியக்குடி வளன்நகர் குழந்தை ஏசு ஆலயத்துக்குட்பட்ட அரியக்குடி கல்லறை தோட்டத்தில் பாதிரியார் அந்தோனி மைக்கேல் தலைமையிலும், செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயத்துக்கு உட்பட்ட ரஸ்தா கல்லறை தோட்டத்தில் பாதிரியார் அந்தோணிசாமி தலைமையிலும், ஆவுடை பொய்கையில் பாதிரியார் அருள்ஜோசப் தலைமையிலும் கல்லறை திருநாள் திருப்பலி நடந்தது.