குமாரநல்லூர் பகவதி அம்மன் கோவிலில் நவ. 11ல் கும்பாபிஷேக விழா துவக்கம்
பாலக்காடு: கோட்டயம், குமாரநல்லுார் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நவ., 11 முதல் 18 வரை நடக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் குமார நல்லுார் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மதுரை மீனாட்சி அம்மன், கன்னிகை வடிவத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் திருப்பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சிறப்பாக நடந்து, தற்போது நிறைவடைந்துள்ளது. சோபானத்துடன், தங்க முலாம் பூசிய, எட்டு கோபுர கலசங்கள் நிறுவப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வரும், 11 முதல் 18ம் தேதி வரை கோவில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 16ம் தேதி சிவன் சன்னதியிலும், 18ம் தேதி கார்த்தியாயினி சன்னதியிலும், பிரம்ம கலசாபிஷேகம் நடக்க உள்ளது.டிச., 4ம் தேதி, திருக்கார்த்திகை விழா துவங்குகிறது. அன்று மாலை, தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, கோவில் உற்சவ வழிபாட்டை துவக்கி வைக்கிறார்.
கோவில் மேலாளர் சங்கரன் நம்பூதிரி கூறுகையில்,- மதுரை மீனாட்சி அம்மனாக, குமாரநல்லுார் கோவிலில் எழுந்தருளியுள்ள கார்த்தியாயினி தேவியின், திருப்பணிகளுக்கு நன்கொடை அளித்த பக்தர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நவ., 11 முதல் 18 வரை நடக்கும் கும்பாபிஷேக விழா மற்றும் டிச., 4 முதல் 13 வரை நடக்கும் கார்த்திகை விழாவில் பங்கேற்று, தேவி அருள் பெற, பக்தர்களை அழைக்கிறோம், என்றார்.