உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி விழா: முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம்

கந்த சஷ்டி விழா: முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம்

தேனி: தேனி மாவட்டத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தேனி.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நேற்று காலை முருகப்பெருமான்,வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. வேத மந்திரங்கள் முழங்க பகல் 11:30 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* கம்பம் வேலப்பர் கோயிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. தினமும் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மஞ்சள் பட்டு உடுத்தி மயில் வாகனத்தில் வள்ளிதெய்வானை முருகனுடன் எழுந்தருளினார். மங்கல வாத்தியம் இசைக்க, வேதமந்திரங்கள் முழங்க முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை கழுத்தில் மங்கலநாண் அணிவித்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். முருகப் பக்தர்கள் சபை சார்பில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை முன்னாள் எல்.ஏ.,ராமகிருஷ்ணன் உள்பட பக்த சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

* உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு திருநாண் அணிவித்தார். முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அன்னதானம் நடைபெற்றது.

*போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டியையொட்டி முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருகல்யாணம் நடந்தது. சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. திருமண கோல அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அலங்கார ஏற்பாடுகளைசோமஸ் கந்த குருக்கள் செய்திருந்தார். முருகன் கந்த சஷ்டி திருக்கல்யாண அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் கிருஷ்ணவேணி செய்தார்.

* கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று சுந்தரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. சீர் கொண்டு வந்து, வள்ளி தெய்வாணைக்கு மெட்டி அணிவித்து, தாலி கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்னை நடந்தது. திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது.

* ஆண்டிபட்டியில் கந்த சஷ்டி விழா நடந்தது. சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த விழாவில் முருகன் சன்னதியில் தினமும் கந்த சஷ்டி பாடி விரதம் இருந்தனர். சிறப்பு அபிஷேகங்கள்,ஆராதனைகள் நடந்தது. நிறைவு நாளில் பருப்பு நீர் படையல் செய்து, விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்கார நிகழ்ச்சி, திருக்கல்யாணம் நடந்தது. சக்கம்பட்டி மேலப்பிள்ளையார் கோயிலில் நடந்த விழாவில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. கோயிலில் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !