உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயங்களில் 12ல் சனிப்பிரதோஷம்

சிவாலயங்களில் 12ல் சனிப்பிரதோஷம்

ஊத்துக்கோட்டை : சிவாலயங்களில், வரும் 12ம் தேதி, சனிப்பிரதோஷ விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவில். இக்கோவிலில், சிவபெருமான், உலகை காக்க ஆலகால விஷத்தை குடித்து, மயங்கிய நிலையில் அன்னை சர்வமங்களாவின் மடியில் தலை வைத்து படுத்துள்ள காட்சியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரதோஷ விழா கொண்டாட மூல காரணமாக அமைந்தது இக்கோவில் என கூறப்படுகிறது.இங்கு ஒவ்வொரு மாதமும், திரயோதசி நாளில் பிரதோஷ விழா கொண்டாடப்படும். இதில், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், உலகை காக்க விஷம் அருந்திய நாள் சனிக்கிழமை. அதனால் இந்தாளில் வரும் பிரதோஷம் முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும், இரண்டு, மூன்று சனிப்பிரதோஷங்கள் மட்டுமே வரும். இந்தாண்டு மொத்தம், ஐந்து பிரதோஷ விழாக்கள். இதில், கடந்த ஜனவரி, 6, 20 ஆகிய தேதிகள், ஜூலை, 2 என, மூன்று பிரதோஷ விழாக்கள் முடிந்துள்ளன. வரும், 12ம் தேதி நான்காவது பிரதோஷம் நடைபெற உள்ளது. இந்தாண்டின், கடைசி சனிப்பிரதோஷ விழா, வரும், 26ம் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி, பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில், காரணி காரணீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவாலங்களில் சனிப்பிரதோஷ விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !