திருத்தணி கோவிலில் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட்
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், அபிஷேகங்கள், தங்கும் விடுதிகள் முன்பதிவை தொடர்ந்து, தற்போது, சிறப்பு தரிசன டிக்கெட்டும் நேற்று முதல் இணையம் (ஆன்லைன்) மூலம் பதிவு செய்து, மூலவரை தரிசிக்கலாம். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக, ஒன்றரை ஆண்டுக்கு முன், மூலவருக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகங்கள், தங்கத்தேர், வெள்ளித்தேர் ஆகியவற்றிக்கு பக்தர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ஏற்பாடு கோவில் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. அதே போல் பக்தர்கள் தங்குவதற்கும், தேவஸ்தான குடில்களும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்நிலை யில், மலைக்கோவிலில் மூலவரை, விரைவு தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தால் விற்பனை செய்யப்படும், 25, 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மட்டும் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிக்க வரும் நேரத்தில் வாங்க வேண்டியிருந்தது. இதனால், வெளியூர் பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவதற்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. குறிப்பாக, முக்கிய விழாக்களின் போது, சிறப்பு தரிசன டிக்கெட்
வாங்குவதற்கு, இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக, முதற்கட்டமாக, 100 ரூபாய் தரிசன டிக்கெட் மட்டும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, காத்திருக்காமல் மூலவரை தரிசிக்கலாம். இதுகுறித்து, கோவில் தக்கார் ஜெய்சங்கர் கூறியதாவது: மலைக்கோவிலில், பக்தர்கள், மூலவரை தரிசிக்க, சிறப்பு டிக்கெட் வாங்க, ஆடிக்கிருத்திகை, பிரம்மோற்சவம், கந்த சஷ்டி மற்றும் மாதந்தோறும் வரும் கிருத்திகை ஆகிய நாட்களில் மழை மற்றும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால், பக்தர்கள் வசதிக்காக, இன்று (நேற்று) முதல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறினர். மேலும், பக்தர்கள் www.tirutanigaimurugan.tnhrce.in என்ற இணையதள முகவரியில் சென்று முன்பதிவு செய்து கொண்டு, தரிசன டிக்கெட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து, படிப்படியாக, 25 மற்றும் 50 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளும், ஆன்லைன் மூலம் பெறும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார்.
தேவஸ்தான விடுதிகள், ஆன்லைன் மூலம் முன்பதிவு விபரம்
குளிர்சாதன குடில் 1,500
சாதாரண குடில் 750
அறை 450
முருகன் கோவிலில், ஆன்லைன் மூலம் சேவைகள் விபரம்:
சேவைகள், கட்டணம் (ரூபாயில்)
பஞ்சாமிர்த அபிஷேகம் 1,000
பால் அபிஷேகம் 100
சந்தனகாப்பு 4,000
கல்யாண உற்சவம் 2,000
தங்கத்தேர் 2,000
வெள்ளித்தேர் 3,500
வெள்ளி மயில் வாகனம் 3,500
கேடய உற்சவம் 1,000
தங்க கவசம் 500
சிறப்பு தரிசன டிக்கெட் 100.