திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு அவினாசியில் இருந்து மாலை!
அவினாசி : திருப்பதி - திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்திற்கு, அவினாசியிலிருந்து மலர் மாலைகள் அனுப்பப்பட்டன. திருப்பதி - திருமலையில், புரட்டாசி மாத பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதில் நடைபெறும் உற்சவமூர்த்தி பிரகார உலாவுக்கு மலர் மாலைகள், மலர் கீரிடம், தாயாருக்கு மலர் ஜடை வில்லை ஆகியன அனுப்பப்பட்டன. நாளை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, மொத்தம், 12 வகையான மாலைகள், அவினாசியிலுள்ள பாபு மலர் நிலையத்தில் கட்டப்பட்டு அனுப்பப்பட்டன. மலர் வியாபாரி பாபு கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக திருமலை பிரம்மோற்சவ விழாவிற்கு, அவினாசியில் மலர் மாலைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்களால் மலர் மாலைகள், கிரீடம் ஆகியன திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில், வெட்டிவேர், பச்சை ஏலக்காய், ஆர்க்கிட், திராட்சை, ரோஸ் பெடல்ஸ், கருந்துளசி உள்ளிட்ட, 10 வகையான மாலைகளும், பெருமாளுக்கு மலர் கிரீடமும், தாயாருக்கு மலர் ஜடைவில்லையும் இடம் பெற்றன. இதற்காக எங்களது நிறுவனத்தில், 50 பேர் கொண்ட தொழிலாளர்களால், மாலைகள் நேர்த்தியாக உருவாக்கப்பட்டன. திருமலை பெருமாளுக்கு மலர் மாலைகளை தொடுப்பதை மிகவும் பாக்கியமாக கருதுகிறோம். இவ்வாறு பாபு கூறினார்.