வைத்தியநாதசுவாமி கோயிலில் 200 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு வைத்தியநாதசுவாமிக்கு கும்பம் வைத்து ஹோமம், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு 200 கிலோ அரிசியில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து சிவசகஸ்வரநாம அர்ச்சனை மற்றும் தீபராதனை நடந்த பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. திரளான பக்தர்கள் வைத்தியநாதர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வணங்கினர். மாலையில் பவுர்ணமி பூஜை, கார்த்திகை பூஜை நடந்தது.ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி அன்னாபிஷேக வழிபாடு நேற்று இரவு நடந்தது. அதிகாலையில் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் 18 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில் கோயில் மைய மண்டபத்தில் பூரணகும்பம் வைத்து ஹோமம் நடந்தது. அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் உள்ளிட்ட பஞ்சபுராண பாராயணம் நடந்தது. பின்னர் அபிஷேக அன்னத்தால் சிவலிங்கம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் கோயிலை சுற்றி கொண்டு வர அர்ஜூணா நதியில் கரைக்கப்பட்டது. அபிஷேக அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக பூஜிக்கப்பட்ட கும்பநீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு, அர்த்தஜாம பூஜை நடந்தது. பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.