மழை வேண்டி துளசி மாதா திருக்கல்யாணம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் மழைவேண்டி நடந்த துளசி மாதா திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வத்திராயிருப்பு ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த இவ்விழாவில் அதிகாலையில் ஆஞ்சநேயருக்கு 18 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு வழிபாடு , நாமாவளி பூஜை நடந்தது. மாலையில் துளசி மாடத்தில் இருந்த துளசி மாதாவிற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ராதை அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கிருஷ்ணருக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. மேலப்பாளையத்தில் உள்ள பஜனை மடத்திலிருந்து சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலம் புறப்பட்டது. கோயிலை வந்தடைந்த கிருஷ்ணருக்கு சிறப்பு ஆரத்தி அலங்காரம் செய்து பக்தர்கள் வரவேற்றனர். அங்கு மணமேடையில் எழுந்தருளிய கிருஷ்ணர், துளசிமாதாவிற்கு மாலை அணிவித்தார். பல்வேறு திருமணச் சடங்குகளுக்கு பின் தாலி அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் பூக்கள், அட்சதை துவி வணங்கினர். தொடர்ந்து சுவாமிகள் மணமேடையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களின் பஜனை வழிபாடு , வாணவேடிக்கைகளுடன் வளையல் தானம் நடந்தது. மாதுரி ரமணா சாது சங்க குருநாதர் ராஜகோபாலன், சீடர்கள் கார்த்தி, குமார், தீபன், மணி, ராமர் உட்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.