திருப்பூர் கோவில்களில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் பக்தி பரவசம்!
திருப்பூர்: திருப்பூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். அனைத்து உயிர்களுக்கும் அன்னம் அளித்து பாதுகாக்கும் சுவாமிக்கு, ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பாகும். ஐம்பெரும் பூதங்களால் உருவாகும் அன்னத்தால், அபிஷேகம் செய்வதே, அன்னாபிஷேகம் ஆகும். திருப்பூர், அவிஷேகபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள, பிரமாண்ட லிங்கத்துக்கு, 75 கிலோ அரிசியில், அன்னம் தயாரித்து அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 16 வகையான காய்கறிகள், கீரை வகைள், பழங்கள், பலகாரங்கள் என, உணவு பொருட்களால், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மூலவருக்கு, அன்னம், காய்கறிகள், பழங்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களின் "ஓம் நமசிவாயா கோஷம் முழங்க, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் நேற்று மாலை, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, காசிவிஸ்வநாதர் கோவில், எஸ்.வி.,காலனி, இளங்கோ நகர், ஸ்ரீ யோகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில், இறைவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.