வேதகிரீஸ்வரர் கோவிலில் அனுமதி மறுப்பு?
 திருக்கழுக்குன்றம்:  திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைகோவிலில் உள்ள வேதகிரீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை என, எழுந்த குற்றச்சாட்டு குறித்து, கோவில் நிர்வாக அதிகாரிகள் சிவாச்சார்யார்களிடம் விசாரணை நடத்தினர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற சிவஸ்தலம். வேதகிரீஸ்வரர் மலைகோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அரசு அதிகாரிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள், அர்த்த மண்டபத்தில் இருந்து பார்த்தால் தான், சுவாமியை தெளிவாக தரிசனம் செய்யமுடியும். ஆனால், அங்கு பூஜை பணியில் இருக்கும் சில சிவாச்சார்யார்கள், கோவிலுக்கு வரும் முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்களை அர்த்த மண்டபத்தில் அனுமதிப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. பக்தர்கள் சார்பில், கோவில் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, செயல் அலுவலர், ஆய்வாளர் முன்னிலையில், புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடந்தது. அதன் பின், பக்தர்கள், உபயதாரர்கள், அரசு அதிகாரிகள் என, யாராக இருந்தாலும் சுவாமி தரிசனம் செய்ய  அனுமதிக்க வேண்டும் என, சிவாச்சாரியார்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக, கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.