உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி மாவட்டத்தில் சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்கள்

தேனி மாவட்டத்தில் சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்கள்

கம்பம் : கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், வீரப்ப அய்யனார் கோயில், தீர்த்த தொட்டி ஆறுமுக நயினார் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு மாலையணிந்தனர். கம்பம்: மண்டல பூஜை மற்றும் மகரஜோதியையொட்டி சபரிமலை சாஸ்தாவிற்கு மாலையணிய பக்தர்கள் கடந்த சில நாட்களாகவே கம்பம் கடைகளில் துளசி மாலை, காவி வேட்டி சட்டை வாங்கினர். கார்த்திகை முதல் தேதியான நேற்று அதிகாலை முதல் சுருளி அருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு குளித்துவிட்டு, சுருளி வேலப்பர், பூதநாராயணர் கோயில்களில் மாலையணிந்தனர். முல்லைப் பெரியாறு ஆற்றங்கரைகள், கோயில்களிலும் பலர் மாலையணிந்தனர்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு விழா நடந்தது. அதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டது. குருசாமி முத்துவன்னியம் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். ஐயப்ப பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதியில் நீராடி, படித்துறை அருகேயுள்ள விநாயகர் கோயில் முன் ஐயப்ப பக்தர்கள் கருப்பு, காவி ஆடைகளை உடுத்தி சரண கோஷமிட்டு மாலை அணிந்து கொண்டனர். இவர்களுக்கு குருசாமி ஜோதிசாமி மாலை அணிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !