தி.மலை தீப திருவிழா பத்திரிகை சிறப்பு பூஜையுடன் வினியோகம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா பத்திரிக்கைகளுக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, முக்கிய பிரமுகர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும் டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச.,9ல் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில் மஹாரத தேரோட்டமும், டிச., 12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவுக்கு முக்கிய பிரமுகர்களை அழைப்பதற்காக, சிவகாசியிலிருந்து அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கை கோவிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. இவற்றிற்கு நேற்றிரவு, 7:30 மணிக்கு, சம்பந்த விநாயகர் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து, முக்கிய பிரமுகர்களுக்கு தீப திருவிழா பத்திரிக்கை வினியோகிக்கும் செய்யும் பணி துவங்கியது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.