உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் குவியும் பக்தர்கள்: அன்னதானத்துக்கு கேரள ஐகோர்ட் கிடுக்கிப்படி!

சபரிமலையில் குவியும் பக்தர்கள்: அன்னதானத்துக்கு கேரள ஐகோர்ட் கிடுக்கிப்படி!

சபரிமலை: மண்டலகால பூஜை நடைபெற்று வரும் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனத்திற்காக  பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலையில் அன்னதானம் நடத்துவதற்கு ஐயப்பா சேவா சங்கம் உள்ளிட்ட தனியார் அமைப்புகளுக்கு ஐகோர்ட் அனுமதி மறுத்துள்ளது. தற்போது தேவசம்போர்டு மட்டுமே இங்கு அன்னதானம் வழங்குகிறது. தானங்களில் சிறந்தது அன்னதானம். அதுவும் சபரிமலையில் அன்னதானம் என்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. தேவசம்போர்டு நடத்தும் அன்னதானம் மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் அமைப்புகள் இங்கு அன்னதானம் நடத்தி வந்தது. ஆனால் இதற்காக பெருமளவு பணம் வசூல் செய்யப்படுவதாக எழுந்த புகார் எழுந்தது. கடந்த ஆண்டு சீசனுக்கு முன்னதாக இதுபற்றி ஐகோர்ட் நியமித்த சிறப்பு ஆணையர் அளித்த அறிக்கை மீது விசாரணை நடத்திய சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனுசிவராமன் ஆகியோர், தனியார் அமைப்புகள் சபரிமலையில் அன்னதானம் நடத்த தடை விதித்தனர். இதை எதிர்த்து ஐயப்பா சேவா சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் அப்பீல் செய்தது.

அன்னதானத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து விட்டதால் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஐயப்பா சேவாசங்கம், ஸ்ரீபூதநாத டிரஸ்ட், ஐயப்பா சேவா சமாஜம் ஆகிய மூன்று அமைப்புகளுக்கு ஒரு ஆண்டு காலத்துக்கு மட்டும் அன்னதானம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கினர். இது கடந்த ஐப்பசி மாத பூஜையுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டும் அனுமதி வழங்க கேட்டு கேரள ஐகோர்ட்டை ஐயப்பா சேவா சங்கம் அணுகியது. ஆனால் தற்போது அனுமதி வழங்க தேவையில்லை என்றும், அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது அனுமதி வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் ஐயப்பா சேவா சங்கம் சுக்குநீர், ஸ்டிரெச்சர் சர்வீஸ் போன்ற சேவைகளை செய்ய முடிவு செய்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய அன்னதான மண்டபத்தில் இடைவிடாது அன்னதானம் வழங்கி வருகிறது. பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சாப்பிட்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !