எங்கும் நிறைந்த பரம்பொருள்!
எங்கும் நிறை பரம்பொருளாய் சிவம் விரிந்திருக்க, அவரின் சக்தியே இந்தப் பிரபஞ்சத்தை, உலகை, மனிதர்களை மாயதேவியாக ஆட்டுவிக்கிறாள். அவளாலேயே இந்த உலகமும், பிரபஞ்சமும், செயலாற்றுகின்றன. சக்தியே வாழ்வில் மூலாதாரம். வாழ்க்கையே அவள்தான். அவளின்றி இங்கு எதுவும் இயங்குவதில்லை. அவளே ஆட்டுவிக்கிறாள். சர்வம் சக்தி மயம். இந்த மகாசக்தியை வழிபடும் நாட்கள் எப்பேர்ப்பட்ட மகோன்னதமான நாட்களாக அமையும். ஒன்பது இரவுகள் அவளை வழிபட்டு, விஜயதசமியில் வெற்றிவாகை சூடி, பாரத தேசமெங்கும் சக்தியலைகள் பரவி ஆன்மிக உணர்வுகள் மேலோங்கட்டும்.
உத்தம: புருஷஸ்த்வன்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிச்ய பிபர்த்யவ்யய ஈச்வர:
(அத்: 15 ஸ்லோகம்:17)
ஈஸ்வரன் நிர்விகாரப் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் மூவுலகினுட் புகுந்து அதைத் தாங்குகிறார்.
சகுண பிரம்மம் அல்லது ஈசுவரன், மாயாசஹிதன் உலகங்களும் உயிர்களும் (ஜகத், ஜீவன்) அவருடைய தோற்றங்களாம். நமது பண்பட்ட தூய அறிவுக்கு எட்டும் விபூதிகள் யாவும் ஈசுவரனைச் சார்ந்தவைகள். அதற்கு அப்பாற்பட்டவர் புருஷோத்தமன். அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாவதில்லை. சுத்த சைதன்யமாக நீக்கமற அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவரிடத்து அவரது பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன.