எந்த செய்வினைக்கு எந்த கடவுளர்களை வணங்க வேண்டும்?
எந்தெந்த நோய்க்கு, என்னென்ன மருந்துகள் சாப்பிட வேண்டும்? எத்தனை நாள் சாப்பிட வேண்டும்? என்ன பத்தியம் இருக்க வேண்டும்? என்று ஓர் மருத்துவரிடம் கேட்டால், அவர் அதற்கு பதில் சொல்லாமல், அப்படி அனைத்தையும் பட்டியலிட்டு சொல்ல முடியாது. குறிப்பிட்ட ஓர் வியாதியைச் சொன்னால் அதற்கான மருந்தை, பத்தியத்தைச் சொல்கிறேன் என்பார். அதுபோலதான் இந்தக் கேள்வியும். செய்வினை என்பது மற்றவர் மூலம் நமக்கு ஏற்படும் துன்பம். மற்றவரின் துஷ்ட தெய்வ வழிபாடுகள், மந்திர பிரயோகங்கள், மனதிலுள்ள பொறாமை அஸூயை போன்ற எண்ணங்கள். ஏன்? கெட்ட பார்வை போன்ற பலவும் பலவகையில் நம்மை பாதிக்கச் செய்யும். ஆகவே, என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்பதைக் கண்டறிந்து, அதற்குத் தக்க, தெய்வ வழிபாடு போன்ற பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால், வியாதி வரும் முன்பாகவே, நேர்மையான வாழ்க்கை, தடுப்பு மருந்துகள் உபயோகித்தல் போன்றவை மூலம் வியாதிகள் வராமல் தடுக்க முயற்சிக்கலாம் அல்லவா? அதைப் போலவே நேர்மையாக சாஸ்திரம் கூறும் வாழ்க்கை, குறைவான ஆசை, நிறைவான செயல், தூய்மையான, நேர்மையான சிந்தனை, மந்திரம் ஜபம், பாராயணம் என தீவிரமான தெய்வ வழிபாடு, ஏழைகளுக்கு தானம் போன்றவற்றைச் செய்தால் எப்படிப்பட்ட செய்வினையும் நம்மை பாதிக்காது. ஆகவே, செய்வினை ஏற்பட்டிருக்குமோ என்னும் பயத்தை விலக்கி, நாம் நேர்மையாக வாழ்கிறோம், தெய்வத் தொடர்புடன் வாழ்கிறோம். நம்மை செய்வினைகள் ஒன்றும் செய்யாது என்னும் தன்னம்பிக்கையுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.