ஆகாயத் தலத்தில் அதிசய ஆராதனை!
புராதனமான கோயில்கள் அத்தனைக்கும் அநேகமாக தலவரலாறு உண்டு. அங்கெல்லாம் தெய்வங்கள் எழுந்தருளியிருப்பதற்கான புராணக் காரணங்கள் அவை. அந்த வரலாறுகள் சில பல தலங்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கு. அந்த வகையில் சிதம்பரத்திற்கான புராண வரலாறு மற்ற எந்தக் கோயிலின் தலவரலாறுடனும் ஒப்பிடமுடியாத தனித்துவம் வாய்ந்தது. இங்கே எழுந்தருளியிருக்கும் ஆனந்த நடராஜப் பெருமான், ஆதியில் அரவணை யில் துயிலும் அரங்கனின் அகத்தினில் திருநடனம் செய்த பிறகு வெளிப்பட்டவர். திருமால் இவரது திருநடனம் கண்டு மனம் பூரித்ததில் அவரது கனம் அதிகரிக்க, அதனால் தினம் அவரைத் தாங்கும் ஆதிசேஷன் திகைத்துப்போய்க் காரணம் கேட்க, மகிழ்ச்சிக்கு காரணம் மனக்கண்ணில் மகேசனின் ஆடலைக் கண்ட ஆனந்தம் என்று சொன்னார், அனந்த சயனன். அதனால் அந்தத் திருநடனம் காண ஆசைப்பட்ட ஆதிசேஷன், பதஞ்சலியாக வடிவெடுத்து பரமனை வேண்டி தவம் செய்தார். மகாவிஷ்ணுவின் மனக்கண்ணில் இருந்த அதே திருக்கோலத்தை ஆதிசேஷனாகிய பதஞ்சலிக்குப் பரமன் காட்டியருளிய தலம் இது.
ஊழியில் உலகம் ஆழியில் மூழ்கியதும் ஆலிலையில் அரிதுயிலில் ஆழ்ந்துவிடும் திருமால், பின்னர் பிறைசூடன் திருநடனம் புரிந்து தரணியைத் தழைக்கச் செய்யும்போதுதான் விழிக்கிறார் என்றும், அவர் காணும் முதல் காட்சியே நடேசேன் ஆனந்தமாக நடனமாடுவதைத்தான் என்றும் புராணங்கள் சொல்கின்றன அல்லவா? அதை அப்படியே கண்முன் காட்சியாகக் காட்டுவதுபோல் இங்கே ஏகாந்த சயனத்தில் இருந்தவாறே பரமனின் திருநடனத்தை பரந்தாமன் பார்ப்பதை நாமும் தரிசிக்க முடிகிறது. இந்தப் பெருமாள் திவ்யதேசப் பெருமாள் என்பதால் திவ்ய தரிசனம் கிடைக்கிறது. இந்தத் தலத்தில் செய்யப்படும் யாகம், பூஜைகள், மந்திர பாராயணங்கள் என்று எதுவானாலும் அது உலகம் எங்கும் பரவும் என்பது ஐதிகம். காரணம், இது ஆகாயத் தலம். ஆகாயம், உலகம் முழுமைக்கும் பொதுவானது அல்லவா? மனமும் எல்லை இல்லாதது. அது எங்கும் எப்போதும் பரவக் கூடியது. பரந்தாமனின் மனதில்தானே முதல்முதலாகத் திருநடனம் செய்தார் முக்கண் இறைவன். அதனால் இது மனோமயகோசத்தலம் என்றும் சொல்லலாம்.
அதுமட்டுமல்ல, இறைவன் ஆனந்தமாக ஆடல்புரிவதால் இது ஆனந்தமயகோசம் ஞானத்தினை அருளும் இறைவனாக குஞ்சிபாதம் காட்டி நடனம் புரிவதால், ஞானமயம் என்கிற புத்திமயகோசம். (உமைகாந்தன் உடுக்கை, அக்னியால் உலகம் உருவான விதத்தை உணர்த்துவதால் விஞ்ஞானமய கோசம் என்றும் சொல்லலாம்.) இறைவனின் ஆடலால்தான் உலகம் தொடர்ந்து இயங்குகிறது. அதனால்தான் பயிரும் உயிரும் செழிக்கிறது என்பதால் இதுவே அன்னமயகோசம். இப்படி உயிர்களின் இயக்கத்திற்குக் காரணமான பஞ்சமயகோசங்களையும் தன்னகத்தே கொண்ட தலம் உலகிலேயே வேறு எதுவும் இல்லை. இப்படி மனிதனின் சூட்சுமமான உடல்களைக் குறிப்பது மட்டுமல்ல, இவற்றினை இணைத்து உயிரை செயல்பட வைக்கும் பிராணமய கோசமாக இறைவனே திருநடனம் செய்வதும் இங்கேதான். ஆமாம், ஆடல்வல்லானின் திருநடனம்தானே அகிலத்தையே இயக்குகிறது! பஞ்ச கோசம்தான் மனிதனின் சூட்சும வடிவம் என்பதை இத்தலத்தின் பஞ்சகோஷ்டம் உணர்த்துகிறது.
பஞ்சமயகோசத்தலம் என்பதைவிட பஞ்சபூத தலம் என்று சொல்வது இன்னும் பொருத்தமானது. அதற்குக் காரணம் நடராஜப் பெருமானின் திருக்கரத்து அக்னி இது அக்னிதலம் எனக் காட்ட, காற்றின் மூலம்தான் ஒலிபரவும் என்பதால் உடுக்கையும் காற்றை உள்ளிழுத்தே உமிழும் நாகமான ஆதிசேஷன் ஆராதித்த சம்பவமும் வாயுதலம் என உணர்த்த, ஆடல்வல்லான் அபிஷேகப் ப்ரியனாகத் திகழ்வதால் நீர்த்தலம் என்பது நிச்சயமாகிறது. விண்ணில் விஷ்ணு கண்ட திருநடனத்தை மண்ணுலகில் மகேசன் ஆடியதால் பிருத்வி தலமும் ஆகிறது. அம்பலத்தே ஆடும் இறைவனின் ஆகாயத் தலமாகக் கூறப்படும் இந்த க்ஷேத்திர தரிசனமே பஞ்சபூத தலங்களின் ஒட்டுமொத்த சேர்க்கையாகத் திகழ்கிறது என்றால் அது எத்துணை அற்புதமானது!
சபாபதிக்கு உரித்தான பஞ்ச சபைகளில் இது கனகசபை என்கிற பொற்சபை. மற்றவை, வெள்ளி (மதுரை), தாமிரம், (நெல்லை), ரத்தினம் திருவாலங்காடு, சித்திரம் (குற்றாலம்) ஆகிய தலங்கள். பொற்சபையான சிதம்பரமே கூத்தபிரானின் முதலாவது திருநடனம் நிகழ்ந்த தலம் என்பதால் மற்ற சபைகளைவிட இதற்கே தனிச்சிறப்பு! நடராஜர் திருவடிவம் விளக்கிடும் தத்துவத்தை இன்றைய விஞ்ஞானிகளும் ஆராய்ந்து உண்மை என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். நடேசனின் கையில் உள்ள உடுக்கை இந்த உலகம் ஒலியின் மூலம் தொடங்கியதை உணர்த்துகிறது. மற்றொரு கரத்தில் உள்ள நெருப்பு அழித்தலைக் குறிக்க மற்றொரு கரம் அஞ்சாதே நான் காத்திடுவேன்! எனக் காட்டுகின்றது. இன்னொரு கரம் தனது திருவடியைக் காட்டி, நீ தஞ்சம் புக வேண்டிய இடம் இதுவே! என்று தெளிவினைத் தருகிறது என்கிறார்கள். ஒலியும் ஒளியும் இணைந்தேதான் இருக்கும் என்பதே உண்மை. உலகம் தோன்றியபோது பெருத்த ஒலியும் ஒளிப்பிழம்பும் தோன்றியதாக இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறுவதையே நடேசப்பெருமான் உணர்த்துகிறார். அவரது திருக்கரத்து உடுக்கை ஒலியினை உணர்த்த ஒளியை அக்னி குறிக்கிறது.
ஆக்கல், காத்தல், அழித்தல் என்கிற அணுவின் இயற்பியல் விதிகளையே நடராஜ தத்துவம் உணர்த்துவதாக அயல்நாட்டு அறிஞர்கள் ஆய்ந்து அறிந்து உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், ஜெனீவாவில் உள்ள, உலகின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடராஜர் சிலையினை அமைத்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல, தெய்வப் பற்றோடு இந்தியத் திருநாட்டின் மீது தேசப்பற்றும் உள்ள தலம் இது. அதனால்தான் ஆண்டுதோறும் சுதந்தரத் திருநாளான ஆகஸ்டு பதினைந்து அன்று இங்கே தேசியக் கொடிக்கு விசேஷ வழிபாடுகள் செய்து, அதனை கோயில் கோபுரத்தின் மீது ஏற்றி ஆனந்தமாகப் பறந்திடச் செய்கிறார்கள். இந்தக் கொடி ஆராதனை நடக்கும் ஒரே தலம் இது மட்டுமே!
இத்தனை சிறப்பு வாய்ந்த சிதம்பரம் தலத்தில் இயற்கையாகவே பக்தி அதிர்வுகள் நிறைந்திருக்கின்றன. அங்கே செல்வோரின் விருப்பங்கள் எல்லாம் ஈடேறச் செய்யும் ஆற்றல் தானாகவே அங்கே பரவியிருக்கிறது. அந்த ஆற்றலை மேலும் பலமடங்கு அதிகரிக்கச் செய்வதுபோல், அதாவது பொன்னை மேலும் மெருகு ஏற்றுவதுபோல் அங்கே நடக்கிறது இந்த விசேஷ லட்சருத்ர பாராயணமும் கோடிவில்வ அர்ச்சனையும் இந்த ஆராதனை உலகிலேயே முதன் முறையாக நடப்பதால் தில்லைவாழ் தீட்சிதர்கள் இதற்கான வழிமுறைகளை ஆகமங்களை ஆராய்ந்து உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறார்கள். இதன் காரணமாக, பெரும் அளவில் இத்தகைய ருத்ர பாராயணங்களை நடத்துவதற்கு இதுவரை சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத நிலை இனி மாறி சிதம்பரத்தில் நடத்தப்படும் முறைகளைப் பின்பற்றி பலகோயில்களில் இத்தகைய மகாமகா லட்சருத்ர பாராயணங்களை நடத்த வாய்ப்பு உண்டு என்பது சிறப்பு.
தினமும் நூறு தீட்சிதர்கள் 1008 வில்வங்களால் சகஸ்ரநாமம் சொல்லி, காலையிலும் மாலையிலும் நடராஜருக்கு அர்ச்சிக்க, நாளொன்றுக்கு இரண்டு லட்சம் வீதம், ஐம்பது நாட்களில் ஒரு கோடி அர்ச்சனை நடத்தப்படுகிறது. லட்சருத்ரஜப பாராயணமும், கோடிவில்வ அர்ச்சனையும் பூர்த்தி அடையும் நாளில் மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ஒருலட்சம் ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமமும், ஏகாதச ருத்ர ஹோமங்களும் நூற்றியெட்டு தீட்சிதர்களால் ஒன்பது யாககுண்டங்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள புனித நதிகளில் இருந்து தீர்த்தங்கள் எடுத்துவந்து ஆடல்வல்லானுக்கு அபிஷேகிக்கப்பட்ட உள்ளது. இந்த அத்தனையும் உலக நன்மைக்காகவே நடத்தப்படுகிறது என்றாலும் அத்தனை தீட்சிதர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் ருத்ரஜப பாராயணத்திலும், சகஸ்ரநாம வில்வ அர்ச்சனையிலும் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. சிதம்பரம் தலத்தில் செய்யப்படும் இந்த விசேஷ ஆராதனையின் நோக்கம், லட்சருத்ர பாராயணத்தினாலும் கோடிவில்வ அர்ச்சனையாலும் பரவும் பக்தி அலைகள், ஆகாயம் பரந்துள்ள அகிலம் முழுக்கப் பரவி, எல்லோருக்கும் லௌகீக வாழ்க்கையும் ஆன்மிக வாழ்க்கையும் ஆனந்தமயமாக அமைந்திட வேண்டும். உலகம் எங்கும் அமைதியும் நிம்மதியும் நிலவ வேண்டும் என்பதுதான்!
இன்றைய நவீன வார்த்தைகளில் சொல்வதானால், எப்படி வைஃபை வசதியை ஓரிடத்தில் உருவாக்கிவிட்டால், அதன் மூலமாக நமக்குத் தேவையான தகவல்களை எப்படி டவுன்லோட் செய்துகொள்கிறோமோ, அப்படித்தான் இந்த லட்ச ருத்ரஜப பாராயணத்தின் மூலம் இறைவனின் எங்கும் பரவச் செய்து வேண்டுவோர் வேண்டுவன பெற்றிட வழிசெய்கிறார். வைஃபை செயல்பட வேண்டுமானால், ரேடியோ அலைகள் மின்காந்த அலைகள் போன்று அலைவரிசைகளை உருவாக்க வேண்டும். அந்த அலைகள் ஆகாயத்தில் எங்கும் பரவி நிறைந்து அதனை சரியான அலைவரிசையில் தொடர்புகொள்வோர்க்குப் பயன்தரும் எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கதாக அலைவரிசை அமைகிறதோ அந்த அளவுக்கு விரைவாக செயல்படும் பலன் தரும் அல்லவா?
அப்படித்தான், சிதம்பரம் ஆகாயத் தலம் என்பதால் அங்கே பக்தி அலைகள், லட்ச ருத்ரபாராயண ஜபத்தின் மூலமும் கோடி வில்வ அர்ச்சனை மூலமும் ஆற்றல்மிக்கவையாக உருவோற்றப்பட்டு, உலகம் முழுக்க அந்த ஆற்றல் பரவச் செய்யப்படும் திருப்பணிதான் இந்த சிறப்பு ஆராதனை. மற்ற உலோகங்களைவிட தங்கம் சிறப்பாக கடத்தும் ஆற்றல் பெற்றது. அதில் தேய்மானமும் குறைவு. (மொபைல் சிம்கார்ட், மெமரிகாட், பென்ட்ரைவ் போன்றவற்றில் தங்கம் சேர்க்கப்படுவது இதனால்தான்). தில்லைத் திருத்தலம் தங்கத்தோடு தொடர்பு உடையதுதானே. அது பொன்னம்பலம் அல்லவா! அப்படியானால் அங்கே சேமிக்கப்படும் ஆற்றல் வெகுகாலம் குறையாது இருக்கும். தேவையானோர் அணுகும் சமயத்தில் சுலபமாகப் பலனும் கிட்டும். எளிதாக எல்லா இடங்களுக்கும் பரவச் செய்யவும் இயலும். நெருங்கிச் செல்லச் செல்ல, சிக்னல் நன்கு கிடைப்பதுபோல வந்து வணங்கும் பக்தர்களுக்கு பலமடங்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.