ஆன்ம வெளிச்ச விழா!
தீபாவளி என்பது வெளிச்சத்தின் விழா. விளக்குகளின் வெளிச்சம், புத்தாடைகளின் வெளிச்சம், உறவுகளின் வெளிச்சம், பட்டாசுகளின் வெளிச்சம் என்று பலவகையான வெளிச்சங்கள் குதூகலிக்கும் கொண்டாட்டத் திருவிழா. வெளிச்சம், ஒளி, பிரகாசம் போன்றவை குறித்து யாக்ஞவால்கிய மஹரிஷிக்கும் ஜனக மாமன்னருக்கும் நடைபெற்ற சுவாரசியமான உரையாடலைப் பற்றி, பிருஹதாரண்யக உபநிஷதம் உரைக்கிறது. யாக்ஞவால்கியரும் ஜனகரும் பல நிகழ்வுக்கு முன்னதாகப் பலமுறை சந்தித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருமுறையில், தான் அதிகமாகப் பேசிவிட்டதாக எண்ணுகிற ஜனகர், வாய்மூடி மௌனியாகிறார்.
ஜனகரின் அறிவாற்றல் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் யாக்ஞவால்கியர், ஏதேனும் வரம் கேட்கும்படி அறிவுறுத்துகிறார். எப்போது தனக்குக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது கேட்க அனுமதிக்கும்படியும், இத்தகைய பாக்கியத்தையே தனக்கு வரமாகத் தரும்படியும் ஜனகர் வேண்டுகிறார். காம ப்ரச்னம் என்னும் பெயர் கொண்ட இந்த வரத்தில் ஓர் அற்புத வசதி. எப்போது வினா எழுப்பத் தோன்றுகிறதோ, எப்போது ஐயம் உள்ளத்துள் முகிழ்கின்றதோ, அப்போது வினவலாம் என்பது மட்டும் இல்லை அந்த வசதி; எப்போது வினா எழுப்பப்படுகிறதோ, அப்போது விடை சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு யாக்ஞ வால்கியர் ஆளாகிறார். அதாவது, மாணாக்கர் வினா எழுப்பும்போது, உபதேசம் தர வேண்டிய அவசியத்துக்கு குரு ஆளாகிறார். இதுவே, காம ப்ரச்ன வரத்தின் வசதி.
பின்னொரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய ஐயங்களை யாக்ஞவால்கியரிடம் எழுப்புகிறார் ஜனகர். இதன் விளைவாக உருவாகிறது ஓர் உரையாடல் - வெளிச்சமும் ஒளியும் குறித்த உரையாடல்!
ஜனகர்: யாக்ஞவால்கியரே, எது வெளிச்சம்? உலகில், எந்த வெளிச்சத்தைக் கொண்டு மனிதர்கள் செயலாற்றுகின்றனர்? யாக்ஞவால்கியர்: சூரிய வெளிச்சம். சூரிய வெளிச்சத்தைக் கொண்டுதான் மனிதர்கள் இங்கும் அங்கும் செல்கிறார்கள்; சுற்றும் முற்றும் காண்கிறார்கள்; செயலாற்றுகிறார்கள். இந்த விடையை ஏற்றுக்கொண்ட ஜனகர், அடுத்த ஐயத்துக்குத் தாவுகிறார்.
ஜனகர்: ஆதித்யனான சூரியன் அஸ்தமித்து விட்டால், எது வெளிச்சம்? எதைக் கொண்டு மனிதர்கள் செயலாற்றுகிறார்கள்?
யாக்ஞவால்கியர்: சூரியன் அஸ்மித்து விட்டால், சந்திரன் இருக்கிறான் - வெளிச்சம் தருவதற்கு. சூரிய வெளிச்சம் இல்லாத காலத்தில், நிலா வெளிச்சம் கொண்டு மனிதர்கள் செயலாற்றுகிறார்கள்.
இந்த விடையையும் ஜனகர் ஏற்றுக்கொள்கிறார். இருப்பினும், அடுத்த சந்தேகம் தோன்றுகிறது. காம ப்ரச்னத் திறன் பெற்ற ஜனகர், உடனடியாக அதனை வினாவாக எழுப்புகிறார்.
ஜனகர்: சந்திரனும் அஸ்தமித்துவிட்டால்...? சூரிய வெளிச்சமும் இல்லாமல், நிலா வெளிச்சமும் இல்லாமல், அந்த வேளையில் மனிதர்கள் எவ்வெளிச்சம் கொண்டு செயலாற்றுகிறார்கள்?
யாக்ஞவால்கியர்: அக்னிர் ஏவஸ்ய ஜ்யோதிர் பவதி அவ்வேளையில் நெருப்பு வெளிச்சம் தரும்.
உண்மைதானே! கதிரவனுடைய ஒளியும் இல்லாமல், நிலவினுடைய ஒளியும் இல்லாமல் தவிக்கும் பொழுதுகளில், நெருப்பை ஏற்றித்தானே மனிதன் பிழைத்துக் கொள்கிறான் (பழங்காலங்களில் நெருப்பாக இருந்தது, பின்னர் ஸாந்தர், மின்விளக்கு என்றெல்லாம் உருமாறியிருக்கலாம்; எப்படியாயினும், இயற்கை வெளிச்சமில்லாத சமயங்களில், செயற்கை வெளிச்சத்தை உருவாக்க மனிதன் முயல்கிறான்). சூரிய -சந்திர வெளிச்சங்கள் இல்லாமல், விவரிக்க முடியாத குளிர் சூழும்போது, நெருப்பின் ஒளியும் வெப்பமும் மனித இனத்தைக் காப்பாற்றுகின்றன.
இந்த உபதேசத்துக்குப் பின்னரும், ஜனகரின் உள்ளம் ஐயத்தால் நிறைகிறது. தடையின்றிக் கேள்வி கேட்க ஆசான் அனுமதித்திருக்கும்போது, விடுவாரா என்ன? கேட்டே விட்டார்.
ஜனகர்: அஸ்தம் இத ஆதித்யே, சந்த்ரமஸி அஸ்தம் இதே, சாந்த அக்னௌ, கிம் ஜ்யோதிர் ஏவாயம் - சூரியன் அஸ்தமித்து விட்டான், சந்திரன் அஸ்தமித்து விட்டான், அக்னியும் அணைந்து விட்டான். அத்தகைய தருணத்தில், எந்த வெளிச்சம், கொண்டு மனிதர்கள் செயலாற்றுகிறார்கள்?
யாக்ஞவால்கியர்: வாக் ஏவஸ்ய ஜ்யோதிர் பவதி
(ஒளி இல்லாத போது) ஒலி வெளிச்சம் ஆகும். விளக்குகள் அணைந்து விட்டன; வேறு வெளிச்சம் இல்லை; மனிதர்கள் எவ்வாறு செயலாற்றுகிறார்கள்? இருட்டில் நம்முடைய கண்புலன் பணி செய்வதில்லை. ஆனால், இருட்டில் கைகளைக் கொண்டு தடவுகிறோம், தட்டுகிறோம், ஏதோ ஒலி கேட்கிறது. அந்த ஒலியைக் கொண்டு அருகிலும் தொலைவிலும் உள்ள பொருட்களைப் புரிந்துகொள்கிறோம். ஒலியெழுப்புகிறோம். வினா எழுப்புகிறோம், சத்தம் செய்கிறோம்- மொத்தத்தில், ஒலியைக் கொண்டு காண்பதற்கு முயல்கிறோம்.
இருட்டு வேளைகளில், ஒலி நமக்கு வெளிச்சம் தருகிறது. இருட்டில் தன்னந்தனியாக இருக்கும் போதும், நடக்கும்போதும், நமக்கு நாமே குரலெப்புகிறோம். பாட்டுப் பாடிக் கொள்கிறோம். ஓசை, நமக்குத் துணையாகிறது. ஒளி செய்யக்கூடியதையெல்லாம் ஒலி செய்கிறது. ஆதலால், ஒலியே ஒளியாகிறது.
ஒலியும் இல்லாவிட்டால்...? காம ப்ரச்னரான (ஆசைப்படும்போது வினவக்கூடியவர்) ஜனகருக்கு இப்படியொரு ஐயம் வராமல் இருக்குமா? வந்தே விட்டது.
ஜனகர்நு: அஸ்தம் இத ஆதித்யே, சந்த்ரமஸி அஸ்தம் இதே, சாந்தே அக்னௌ, சாந்தாயாம் வாசி, கிம் ஜ்யோதிர் ஏவாயம் - சூரியன் அஸ்தமித்து விட்டான், சந்திரன் அஸ்தமித்து விட்டான், அக்னி அணைந்து விட்டான். ஒலியும் ஓய்ந்து விட்டான்- அத்தகைய தருணத்தில், எந்த வெளிச்சம் கொண்டு மனிதர்கள் செயலாற்றுகிறார்கள்?
யாக்ஞவால்கியர் என்ன விடை சொல்லியிருக்கக்கூடும்? அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னர், அப்படியொரு குழலுக்குள் களமிறங்கிக் (கற்பனையாகத்தான்) காண்போமோ?
கும்மிருட்டு. விளக்கேற்றவோ, ஒளிகூட்டவோ வழியில்லை. பேச்சுத் துணைக்கும் ஆளில்லை. என்ன செய்கிறோம்? அல்லது என்ன நடக்கிறது? முதலில், அச்சம், தடுமாற்றம், தவிப்பு. பின்னர்...? நேரம் நகர நகர... ஏதோவொரு தைரியம், துணிச்சல், தெளிவு உறுதி... இத்தியாதி, இத்தியாதி. தைரியமும் துணிச்சலும் தெளிவும் உறுதியும் எங்கிருந்து வந்தன...? எங்கோ... எங்கோ... உள்ளிருந்து! ஆமாம், ஆமாம் உள்ளிருந்துதான்! ஒளி செய்யக்கூடியதை, ஒலி செய்வதற்குத் தலைப்பட்டதை, இப்போது உள்ளிருக்கும் ஏதோவொன்று செய்கிறது. உள்ளிருக்கும் ஏதோவொன்று... அது எது? அதன் பெயர் யாது?
யாக்ஞவால்கியரின் விடையில் வெளிச்சம் கிடைக்கிறது. ஆத்மைவஸ்ய ஜ்யோதிர் பவதி - ஆத்மா, வெளிச்சமாகிறது. சூரியன் இல்லாதபோது, சந்திரன் இல்லாதபோது, அக்னி இல்லாதபோது, ஒலி இல்லாதபோது... ஆத்மா வெளிச்சமாகிறது.
இதில் ஓர் வினோதம் உண்டு. சூரியக் கிரணங்கள் இல்லாத காலம் இருக்கக்கூடும்; சந்திரக் கிரணங்கள் இல்லாத நேரம் வரக்கூடும்; நெருப்பு அணையும் வேளை தோன்றும்; ஒலி ஒலிக்காத பொழுதும் உருவாகும். ஆனால், ஆன்மா இல்லாத நிலை இல்லை. அப்படியானால், சூரியனும், சந்திரனும் அக்னியும் ஒலியும் இல்லாதபோது மட்டும் ஏன் ஆன்மா புலப்படுகிறது? முன்னரே ஏன் புலப்படவில்லை? ஆன்மா இல்லாமல் இல்லை. அது புலப்படவில்லை. ஆம், புலப்படவில்லை. நம்முடைய புலன்கள் தாம், சூரியனையும் சந்திரனையும், அக்னியையும், ஒலியையும் உணர்கின்றன. தாங்கள் உணரும் புறப்பொருட்கள் (சூரியன், சந்திரன், அக்னி, ஒலி) இல்லாதபோது, இதே புலன்கள், அகத்தே உள்ள ஆன்மாவை உணரத் தலைப்படுகின்றன.
நம்முடைய கவனமெல்லாம், வெளியில் இருக்கும் பொருட்கள் மீது, லௌகீகத்தின் வசதிகள் மீது குவிந்து விடுகிறது. புலன்கள் யாவும் பராக் பார்த்துக் கொண்டிருக்கின்றன. (பராக் -வெளியே). கண்கள் புறப்பொருட்களைக் காண்கின்றன, செவிகள் புறப்பொருட்களைக் கேட்கின்றன, நா புறப்பொருட்களைச் சுவைக்கிறது, நாசி புறப்பொருட்களை முகர்கிறது, மேனி புறப்பொருட்களைத் துய்க்கிறது. சுற்றிலும் கவனம் சிதறிவிட்டால், உள்முக நோக்கு குன்றிவிடுகிறது. அத்தகைய தருணங்களில், ஆன்மா தரும் வெளிச்சம் மனத்துக்கும் அறிவுக்கும் அகப்படுவதில்லை.
தேர்வுப் பாடத்தை விட்டுவிட்டுச் சுற்றுவட்டாரத்தில் சுற்றிவரும் மாணாக்கரைப் போல், மையச் சிக்கலை மறந்துவிட்டு மக்களை மயக்க வழிதேடும் அரசியல்வாதியைப் போல், பாய்ச்சலைத் துறந்து விட்டு பக்கவாட்டில் அக்கறை செலுத்தி பாதைமாறும் குதிரையைப் போல், மனிதப் புலன்களும் மனமும், புறத்தே கவனத்தைத் தொலைந்துவிட்டு, அகத்தை மறந்து விடுகின்றன.
உடல் சார்ந்த அறிவியலில், வாங்கி (ரிசெப்டார்) என்றொன்று உண்டு. ரிசெப்டார் என்பது கொள்கலன் போன்றது. குறிப்பிட்ட வேதிப்பொருளை ஏற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட ரிசெப்டார்கள் நம்முடலில் உண்டு. எடுத்துக்காட்டாக, வலியைத் தோற்றுவிக்கும் வேதிமங்களை ஏற்கும் ரிசெப்டார்கள் உண்டு. இத்தகைய வேதிமங்கள் குருதியோட்டத்திலோ உடலின் குறிப்பிட்ட பகுதியிலோ அதிகப்படும்போது, நேரடியாகத் தங்களது ரிசெப்டார்களோடு இணையும்.
ரிசெப்டார்கள், தக்க தகவலை நரம்பு மண்டலத்துக்குத் தெரிவிக்க, வலி உணரப்பட்டு, நோய்க்குறியாக வெளிப்படும். வலியைத் தோற்றுவிக்கும் வேதிமங்களை, அவற்றின் ரிசெப்டார்களோடு சேர விடாமல், முன்னதாகவே மாற்று வேதிமங்களைக் கொடுத்து, அவை சென்று ரிசெப்டார்களோடு இணையச் செய்யலாம். மாற்று வேதிமங்கள் ரிசெப்டார்களைப் பிடித்துக் கொண்டுவிட்டால், வலி வேதிமங்களுக்கு, இணைவதற்கு இடமில்லாமல் போகும். விளைவாக, வலி என்பது தெரியாது. இதே போன்றதொரு தடைத்திட்டம்தான் ஆன்ம வெளிச்சத்தை நாம் உணர்வதிலும் ஏற்படுகின்றது. புலன்கள் புறப்பொருள்களோடு இணைந்து விடுகின்றன. ஆன்மாவும் ஆன்ம வெளிச்சமும் உணரப்படுவதில்லை. எந்தவொரு தடை இணைப்பும் இல்லாமல் இருக்குமேயானால், புலன்களை உள்முகமாகச் செலுத்தினால், ஆன்மாவின் வெளிச்சத்தை உணரலாம்.
நரகாசுரனை அழிப்பதற்காக கிருஷ்ணர் சென்றார்; அப்போது சத்யபாமா தேரோட்டிக் கொண்டு உடன் சென்றாள் என்பது தீபவாளிக் கதை. ஆன்ம வெளிச்சத்தை நரன் (மனிதன்) உணர வேண்டும். இவ்வாறு உணர இயலாதபோது, அதே நரன் அசுரனும் (நரகாசுரன்) ஆகிறான். நரன் பூமியில் பிறந்த பிறப்பால் கிடைப்பது வாழ்க்கைத் தேர். அந்தத் தேரை பூமி மாதாவே (சத்யபாமா, பூமிப்பிராட்டியின் அவதாரம்) ஓட்டுகிறாள். தேர், ப்ரக்ஜ்யோதிஷபுரத்தை அடைகிறது. நரகாசுரனின் தலைநகரான ப்ரக்ஜ்யோதிஷபுரத்தில், சூரியனும், சந்திரனும், அக்னியும் சேவை புரிந்தார்கள்; பொன்னும் பொருளும் கொட்டிக் கலகலத்தன. அதாவது, சூரிய வெளிச்சம், சந்திரவெளிச்சம், நெருப்பு வெளிச்சம், உலோக வெளிச்சம், இன்னும் இன்னும் என்னென்ன வெளிச்சங்களைக் கற்பனை செய்யக்கூடுமோ அந்தந்த வெளிச்சங்கள் யாவும் சேர்ந்ததால், அது ப்ரக்ஜ்யோதிஷபுரம். அந்த வெளிச்சங்களையெல்லாம் அஸ்தமிக்கச் செய்து நிற்கிறார் இருட்டு நிறத்தவரான கிருஷ்ணர். புற வெளிச்சங்கள் பட்டுப் போக, இருட்டின் பளபளப்பில் அகவெளிச்சம் - ஆன்ம வெளிச்சம் பிரத்யக்ஷமாகிறது!
ஆன்ம தீபங்கள், ஆவளிக் கூட்டுகின்றன. ஒளி செய்யாததை நான் செய்வேன் என்று பட்டாசாகப் பட படத்த ஒலி, புஸ்வாணமாகச் சிதறும்போது தோன்றும் கறுப்புக் கூட்டணியில் அகவெளிச்ச சக்கரம் சுற்றுகிறது; உயரமேறி விண்ணில் பாய்கிறது.
ஜனகரும் யாக்ஞவால்கியரும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.