உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐஸ்வர்ய கடாட்சம் தரும் குபேர யந்திரம்!

ஐஸ்வர்ய கடாட்சம் தரும் குபேர யந்திரம்!

அஷ்டதிக்பாலர்களில் எழுவரின் பெயரும், சோமனாகிய சந்திரனின் பெயரும் அவரவர்க்கு உரிய இடத்தில் அமைந்திருக்க, யந்திரத்தின் மத்தியில் ஓம் வைஸ்ரவணாய சுவாஹா என்று இருக்கிறதே, குபேரனின் உண்மையான பெயர், அதுதான், வைஸ்ரவணன். சிவபெருமானின் தோழன், ராவணனால் ஏமாற்றப்பட்ட அவனது சகோதரன், அளகாபுரியின் அரசன், சங்கநிதி பதுமநிதியின் காவலன், வடதிசைக்கு உரியவன். திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தவன், குபேரனை வணங்கினால் குறையாத செல்வம் சேரும் இப்படி குபேரனைப்பற்றிய விவரங்கள் அனைவருக்குமே அறிந்தது தான். குபேர யந்திரத்தை, வெள்ளிக்கிழமை அல்லது பவுர்ணமி தினத்தில் வீட்டு பூஜை அறையில் வையுங்கள். யந்திரத்தின் மையத்தில் உள்ள குபேர ஸ்தானத்தில் சந்தனம் குங்குமம் பொட்டு மட்டும் வைத்தால் போதுமானது. யந்திரத்தில் சிறிய எழுத்துக்கள் அழுத்தமாக தெரியாமல் இருக்கலாம்.

தினமும் வீட்டில் சுவாமி கும்பிடும் சமயத்தில் ஒரு சில நிமிடங்கள் குபேர யந்திரத்தை உற்றுப் பாருங்கள். கடன்கள் அடைந்திடவும், உங்களின் அவசியமான நியாயமான தேவையை நிறைவேற்றிடவும் தேவையான செல்வத்தை அளிக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள். கிடைத்திடும் பணத்தினை முழுமையாக அனுபவித்திட ஆரோக்கியமும், நிம்மதியும் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தியுங்கள். முடிந்தால் ஊதுபத்தி சம்பிராணி தூபம் இடுங்கள். எல்லா தெய்வங்களையும் பூஜை செய்து கும்பிட்ட பிறகு குபேரனை நினைத்து அவனது துதியைச் சொல்லித்தான் கற்பூர ஆரத்தில் காட்ட வேண்டும் என்பது ஐதிகம். புராதன கோயில்களிலும் கூட அர்ச்சனை, ஆராதனைகள் செய்தாலும் கடைசியில் ஆரத்தி காட்டும்போது அப்படித்தான் செய்வார்கள். அப்படி செய்தால் குறை எதுவும் வராது. வேண்டிய பலனைப் பெறலாம் என்கிறது சிவபூஜா விதி. சிவபெருமானே குபேரனுக்குத் தந்த வரம் அது என்கின்றன புராணங்கள்.

அப்படிச் சிறப்பு வரம்பெற்ற குபேரனை யந்திர ரூபமாக நீங்கள் வணங்கும்போது சீக்கிரமாகவே பலன்கள் கிட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும், குறைவில்லாத செல்வ வளம் குபேரனின் அருளால் உங்கள் வாழ்வில் நிச்சயம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நிம்மதி, சந்தோஷம், உற்சாகமாக வாழ்வீர்கள்!

குபேர காயத்ரி:

ஓம் யக்ஷேசாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்

யட்சர்களின் தலைவனே, வைஸ்ரவணனே, குபேரனே குறையில்லா செல்வம் வேண்டி உன்னைக் கும்பிடுகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !