அன்னமய்யா பார்வையில் அனுமன்
ஆந்திர மாநிலம் ஈன்றெடுத்த கவி வாக்கேயகாரர்களிலே மிகச் சிறந்தவர் பத கவிதை பிதாமஹர் ஸார்வபௌமர், சங்கீர்த்தனாச்சார்யா போன்ற பல விருதுகளை பெற்று நம்மிடையே மானசீகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் தாள்ளப்பாக்க ஸ்ரீஅன்னமாச்சார்யார் ஆவார். தமது கீர்த்தனைகளில் தனக்கென தனிப்பாணி அமைத்து புதுமைகளை புகுத்தியவர். எல்லோருக்கும் தமது பாடல்கள் சென்று சேர வேண்டும் என எளிய நடையில் பாடலின் சந்தங்களை அமைத்து பாடியுள்ளார். அவர் பாடல்கள் ஏதும் அறியாத பாமரனும், அனைத்தும் அறிந்த சதுர் வேதியும் புரிந்து பாட வல்லது. அவர் பாடல்கள் இருவகைப்படும். ஒன்று ஆன்மீகம். மற்றொன்று ஸ்ருங்காரம். அவர் பாடல்கள் தன் கூற்றாக, தலைவன் கூற்றாக, தலைவி கூற்றாக, தோழி கூற்றாகவும் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. அது ஜீவாத்மா-பரமாத்மா, தலைவன் - தலைவி, தலைவன் - தோழன், மாமியார் - மருமகள் என சம்பாஷணை விதமாகவும் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு. இத்தகைய பாடல்களை அன்னமய்யா நமக்கு அளித்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
அபுடேமனெ நேமனு என்கிற இந்த கீர்த்தனையில் தலைவனான ஸ்ரீராமன் தனது தாசன் சிறிய திருவடி அனுமனுடன் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அறிந்த மகா காவியமான இராமாயணத்தில் சீதா ப்ராட்டியை பிரிந்த இராமனின் நிலை வால்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது. சுந்தரமான சுந்தர காண்டத்தின் விசேஷமே இந்த இருவரின் நிலையையும் ஒரு சேர கண்டு ஒருவரிடம் மற்றொருவரை பற்றி சொல்லி தேற்றிய சொல்லின் செல்வன் அனுமனின் மிகச் சிறந்த சேவையே. அனுமன் வந்ததை அறிந்த இராமன் மகிழ்ந்து மிகவும் ஆவலுடனும் ஏக்கத்துடனும் நடந்ததை உரைக்கும்படி கேட்கிறார். அதற்கு அனுமன் பதில் உரைக்கிறார். இந்த இருவரின் உரையாடல் அன்னமய்யாவை நெகிழ வைக்கிறது. அந்த காட்சியை அவர்கள் உள்ளத்து நிலையை அழகாக ஒரு கீர்த்தனையாக தந்திருக்கிறார்.
வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் 65 வது ஸர்கக்கத்தில் சீதை சொன்ன விஷயங்களை இராமனிடம் சொல்ல முற்படுகிறார் அனுமான். சீதா பிராட்டி இராமனிடம் கொண்ட அளவற்ற பக்தியையும் அரக்கிகள் அதட்டலையும், இராவணன் உயிருடன் வைத்திருக்க கட்டளை இட்ட காலத்தையும் எடுத்துரைத்தார். வைதேஹி ஜீவித்திருப்பதை கேட்ட ஸ்ரீராமர் உள்ளம் மகிழ்ந்து ஆவலுடன்,
க்வ ஸீதா வர்த்ததே தேவீ கதம் ச மயி வர்த்ததே
ஏதன்மே ஸர்வமாக்யாதே வைதேஹீம் ப்ரதி வானரா
அதாவது சீதை எங்கிருக்கிறாள்? தேவியாவனவள் என் விஷயத்தில் எம்மாதிரி இருக்கிறாள்? வைதேஹியைக் குறித்த எல்லாவற்றையும் சொல் என்றார். இதையே அன்னமய்யா பல்லவி முதல் வரியில்.
அபுடமனே நேமனு மனெனே
என்கிறார்.
சீதையின் சரித்திரம் நன்கு அறிந்த அனுமனை ராமனுடைய சன்னதிக்கு போகும்படி ஏவினார்கள் அப்போது அனுமன் சொல்வான்.
தத்ர த்ருஷ்டா மயா ஸீதா
ராவணாந்தபுரே ஸதீ
ஸம்ந்யஸ்ய த்வயி ஜீவந்தி ராமா
ராம மனோரதம்
ஹே ராமா! ஸ்திரியான சீதை தனது ஆசை முழுவதையும் தங்களிடத்தில் வைத்து ஜீவித்திருக்கிறாள் என்றார் அனுமன். பல்லவி முதல் வரியில் அப்போது என்ன சொன்னாள் என்ன சொல்ல சொன்னாள் என்ற இராமனின் கேள்விக்கு அனுமன்.
தபமே விரஹபு தாபமென...
தவமே விரஹ தாபம்தான் என்கிறாள். இராமனின் ஆவலும் ஆதங்கமும், எதிர்பார்ப்பும் மிகத் தெளிவாக சொன்னவர். ஸீதா பிராட்டியின் தவநிலையைக் கண்டு. மேலும் சீதை தான் இராமனை பிரிந்திருப்பதே வேதனை அந்த விரஹ தாபமே தனது தவமாய் இருப்பதாக இரத்தின சுருக்கமாக சொல்லழகு காட்டி அனுமன் பதில் தருகிறார்.
பல்லவி இரண்டாம் வரியில், இவரின் பதப்பிரயோகம் மிக சுருக்கமாக நன்கு விளங்கும்படி அமைந்திருப்பதாக நோக்குங்கால், வால்மீகி சுந்தர காண்டத்தில் 65 வது ஸர்க்கத்தில் 17 வது ஸ்லோகமாக.
ஏவம் மயா மஹாபாகா த்ருஷ்டா ஜனகநந்தினீ
உக்ரேண தபஸா யுக்தா த்வத்பக்த்யா புருஷர்ஷப