உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவதார புருஷரும் மனித உணர்வுகளும்!

அவதார புருஷரும் மனித உணர்வுகளும்!

புத்தர், சைதன்யர் ஆகிய இருவரைத் தவிர மற்ற அவதார புருஷர்களின் சாதனை வாழ்வைப் பற்றி விளக்கமான எந்தச் செய்திகளையும் சமய வரலாற்று நூல்கள் நமக்குக் தரவில்லை.

உண்மையை அடைவதற்கு அவர்கள் கொண்டிருந்த  அடக்கவொண்ணா ஆர்வம், அளவற்ற தாகம், மேற்கொண்ட முயற்சிகள் இவை பற்றியோ, அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பார்ப்புகள் - ஏமாற்றங்கள், அச்சங்கள்-ஆச்சரியங்கள், இன்பங்கள், ஏக்கங்கள் போன்ற உணர்ச்சிகளைப் பற்றியோ, ஒன்றுக்கொன்று முரண்பட்ட இந்த உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி, மனதில் உறுதியும் தளர்ச்சியும் மாறி மாறி வந்தபோதும் அவர்கள் எவ்வாறு தங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்பது பற்றியோ நமக்கு எந்த வகையான தெளிவான குறிப்பும் வரலாறுகளிலிருந்து கிடைக்கவில்லை.

அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களுக்கும் இளமை மற்றும் வாலிபப் பருவத்தில் அவர்களின் கல்வி, செயல்கள், ஆர்வங்கள் ஆகியவற்றுக்கும் இருந்த தொடர்பு பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வதற்கு நம்மிடம் ஆதாரங்கள் இல்லை.

எடுத்துக்காட்டாக, பிருந்தாவனத்து கோபியரின் உள்ளம் கவர்ந்த கண்ணன் எவ்வாறு தரத்தை நிலைநாட்டிய துவாரகையின் தலைவரான கிருஷ்ணராக மாறினார் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை.

ஏசுவின் முப்பதாம் வயதிற்கு முந்தின வாழ்க்கையைப் பற்றி ஏதோ ஓரிரு குறிப்புகளைத் தவிர வேறெதுவும் நமக்குத் தெரியாது. ஆசாரிய சங்கரரை எடுத்துக்கொண்டால், திக்விஜயம் பற்றிய குறிப்புக்களைத் தவிர அவரது வாழ்க்கையைப் பற்றிய எதுவுமே விவரமாகக் குறித்து வைக்கப்படவில்லை. மற்ற அவதார புருஷர்களின் விஷயத்திலும் இதே நிலையைத்தான் நாம் காண்கிறோம்.

இதற்கான காரணத்தை அறிவது மிகவும் கடினம். பக்தர்களின் தீவிர பக்தி ஒரு காரணமாக இருக்கலாம். தெய்வப் பிறவிகளிடம் மனிதக் குறைபாடுகளைக் காட்ட பக்தர்கள் தயங்கியதால் இத்தகைய குறிப்புகள் மக்களின் பார்வைக்கு வராது போயிருக்கலாம்.

அவதார புருஷர்களின் பரிபூரணத்தன்மை, நல்லுணர்வுகள் போன்றவற்றை உயர்ந்த லட்சியமாக எடுத்துக்காட்டினால் மக்களுக்கு வாழ்வில் நன்மையும் நல்லொளியும் பிறக்கும் என்பது உண்மை. அதே வேளையில், அவதார புருஷர்கள் தாங்கள் உயர்ந்த நிலையை அடைவதற்காக மேற்கொண்ட அசாதாரண முயற்சிகளைப் பற்றித் தெரிவிப்பதால் அந்த அளவிற்கு நன்மை உண்டாகாது என்று எண்ணியும் அவர்களின் சாதனைகளைக் குறித்து வைக்காமல் போயிருக்கலாம்.

பக்தர்கள் தங்கள் லட்சிய மகான்களை முழுமை பெற்றவர்களாகவே எப்போதும் காண விரும்புகின்றனர். மனிதனாகப் பிறந்தாலும் அவதார புருஷர்களிடம் மனித சபலங்கள், குறைபாடுகள் ஆகியவை எப்போதாவது ஒரு சமயம் இருந்திருக்கலாம் என்பதை பக்தர்கள் ஒப்புக்கொள்வதில்லை. பாலகோபாலனின் வாயில் பிரபஞ்சத்தைக் காணவே பக்தர்கள் எப்போதும் விரும்புகின்றனர். அவர்களின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த பொருளற்ற செயல்களில்கூட நன்கு முதிர்ச்சி பெற்ற பெரியவர்களின் அனுபவத்தையும் அறிவையும் காண விழைகின்றனர்.

எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல பரம்பொருளாகவும் பிரபஞ்சம் தழுவிய அன்பு மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாகவே கருதத்துடிக்கின்றனர்.

ஆகவே, அவதார புருஷர்களின் ஆன்மிக சாதனைகளாகட்டும் இல்லை உடல் சம்பந்தப்பட்ட பசி, களைப்பு, உறக்கம், நோய், மரணம் போன்றவை ஆகட்டும், பக்தர்களைப் பொருத்தவரை அவை அனைத்தும் அவர்கள் தங்கள் தெய்வத்தன்மையைச் சாதாரண மனிதர்கள் அறிந்துகொள்ளாதிருக்கவும், பயனற்ற மனிதர்களின் பார்வையைத் திசை திருப்பவும் வேண்டுமென்றே ஆடிய நாடகம்தான். இவ்வாறு பக்தர்கள் எண்ணியதில் வியப்பொன்றும் இல்லை. ஏனெனில் எங்கள் காலத்திலேயே குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வந்தநோய் இத்தகைய ஒரு நடிப்பேயன்றி உண்மையானதன்று என்று அவரது தீவிர பக்தர்கள் கருதியதை நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

பக்தர்களின் இந்த முடிவிற்கு அவர்களின் பலவீனம்தான் காரணம். அவதார புருஷர்களைத் தவறுதலாகப் புரிந்து கொண்டால் தங்கள் பக்திக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்று பக்தர்கள் அஞ்சுகிறார்கள். எனவே அவர்களிடம் சாதனை, முயற்சி போன்ற எந்த மனித இயல்புகளையும் காண அவர்கள் விரும்புவதில்லை. பக்தர்களுக்கு விரோதமாக நாம் எதுவும் கூறுவதற்கில்லை. ஆனாலும் உண்மை என்னவென்றால் இத்தகைய பலவீனம், பக்தனின் பக்தி முதிர்ச்சி பெறாத நிலையில்தான் அவனிடம் தோன்றுகிறது.

உண்மையை உணர்வதற்காகவோ, அனுபூதியில் கண்ட உண்மையை வாழ்வில் செயல்முறைப்படுத்தவோ அவதாரபுருஷர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வெறும் நடிப்பே, அவை <உண்மையல்ல என்று சில பக்தர்கள் நினைக்கலாம். அவர்களுக்கு எங்கள் விடை இதுதான். குருதேவர் இவ்வாறு கூறியதை நாங்கள் ஒருபோதும் கேட்டதில்லை. இதற்கு மாறாகப் பலமுறை அவர், மனித உருவில் கடவுள் வரும்போது முழுக்க முழுக்கச் சாதாரண மனிதனாகவே அவர் செயல்படுகிறார். இன்ப துன்பங்களை அனுபவிக்கிறார். சுயமுயற்சி, ஈடுபாடு, கடுமையான தவம் ஆகியவற்றின் மூலமாக அனைத்து விஷயங்களிலும் முழு அறிவும் ஆற்றலும் பெறுகிறார் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு வரலாறுகளில் தக்க சான்றுகள் உள்ளன. அவதார புருஷர்கள் இப்படி மனிதரோடு மனிதராக, மனிதனைப் போல வாழ்வில்லையெனில் அவரை மனிதகுலத்தின் மீதுள்ள கருணையால் உடல் தரித்தவர் என்று எப்படிக் கூறமுடியும்? அவரது அவதார நோக்கமே பயனற்றதாகிவிடுமே!

குருதேவரின் உபதேசங்களைப் பார்க்கும்போது அவற்றில் இரண்டு வகை இருப்பதைக் காணலாம். அவர் சில வேளைகளில் பக்தர்களிடம், நான் உணவைச் சமைத்துவிட்டேன். நீங்கள் அமர்ந்து உண்ண வேண்டியதுதான். அச்சு தயாராக உள்ளது. உங்கள் மனங்களை அதில் வார்த்துக்கொள்ளுங்கள், உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் என்னிடம் வக்காலத்து கொடுத்துவிடுங்கள் என்றெல்லாம் கூறுவார்.

வேறு சிலவேளைகளில், எல்லா வாசனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக விட்டுவிடுங்கள். அப்போது வெற்றி கிட்டும், காற்றில அடித்துச் செல்லும் இலை போல இறைவன் அருளை நம்பி இருங்கள், பெண்ணாசை, பொன்னாசைகளைத் துறந்து இறைவனுக்காக ஏக்கம் கொள்ளுங்கள், நான் பதினாறு அணாவுக்குச் செய்துள்ளேன். நீங்கள் ஓர் அணாவுக்காவது செய்யுங்கள் என்பார்.

குருதேவரின் இந்த இரண்டு வகையான உபதேசங்களின் உட்பொருளை உணராத காரணத்தால் நாம் இறையருள், மனித முயற்சி, சரணாகதி - சாதனை இவற்றுள் எதைப் பற்றிக் கொண்டு ஆன்மிக வாழ்வில் முன்னேறுவது என்பதைத் தெளிவாக உணர முடியாத நிலையில் தத்தளிக்கிறோம்.

ஒருநாள் தட்சிணேசுவரத்தில் சுவாமி நிரஞ்ஜனானந்தருடன் மனிதனுக்குச் சுயேச்சை சிறிதளவாவது உள்ளதா இல்லையா என்பது குறித்து நீண்ட விவாதத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். வெகு நேரத்திற்குப் பிறகும் பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வு கிட்டாததால் நேராக குருதேவரிடம் சென்றோம்.

குருதேவர் எங்கள் விவாதத்தைக் குறும்புடன் கேட்டார். பின்னர் கம்பீரமாக, யாருக்காவது சுயேச்சை என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா என்ன? கடவுளின் விருப்பத்தால் மட்டுமே உலகில் அனைத்தும் நடக்கின்றன. இனிமேலும் நடக்கும். நாளாகத்தான் மனிதன் இதைப் புரிந்துகொள்கிறான். பசு ஒன்று நீளமான கயிற்றால் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பசுவால் கம்பத்திலிருந்து ஒரு முழ தொலைவில் நிற்க முடியும், அல்லது கயிறு எவ்வளவு நீளமோ அவ்வளவு தூரம் போகவும் இயலும்.

மனிதனின் சுயேச்சையும் இப்படித்தான். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பசு தன் விருப்பம்போலப் படுத்துக் கொள்ளட்டும், நிற்கட்டும் அல்லது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு மனிதன் அதைக் கம்பத்தில் கட்டுகிறான். கடவுளும் மனிதனுக்கு ஓரளவு சக்தியை அளித்து அந்த எல்லைக்குள் அவன் விருப்பப்படிச் செயல்படட்டும் என்று விட்டுவிடுகிறார். அதனால்தான் மனிதன் தன்னால் சுயேச்சையுடன் செயல்படமுடியும் என்று எண்ணுகிறான்.

ஆனால் கயிறு கம்பத்தில் கட்டப்பட்டுள்ளதை மறந்து விடக்கூடாது. ஒருவன் கடவுளிடம் மனமுருகி, ஏங்கி பிரார்த்தனை செய்தால் அவரால் கட்டைத் தளர்த்த முடியும். கயிற்றின் நீளத்தை அதிகப்படுத்த முடியும்; விரும்பினால் கயிற்றை ஒரேயடியாக அவிழ்த்துவிடவும் முடியும் என்று சொன்னார்.

இதைக்கேட்ட நாங்கள், அப்படியானால் ஆன்மிக சாதனைகள் பழகுவதில்கூட சுயமுயற்சிக்கு இடம் இல்லையா? எல்லாம் இறைவன் திருவுளப்படி என்றால் இறைவன் விருப்பப்படித்தான் நான் எல்லாம் செய்கிறேன் என்று ஒவ்வொருவரும் சொல்லக்கூடுமே? என்று கேட்டோம்.

அதற்கு குருதேவர் கூறினார்: வெறும் சொற்களால் என்ன பயன்? முள் இல்லை. அது குத்தவில்லை என்றெல்லாம் சொல்லிவிட்டால் வலி இல்லாமல் போய்விடுமா என்ன? முள்ளில் கைபட்டவுடனேயே ஓவென்று அலறித்துடிக்கிறோமே, அப்போது வாய் ஜாலமெல்லாம் எங்கே போய்விட்டது? சாதனை புரிவது சுயமுயற்சியால் மட்டுமே நிகழ்வதானால் எல்லோரும் அதைச் செய்திருக்கலாமே? ஆனால் எல்லோராலும் முடிவதில்லை. ஏன்? அதன்பொருள் என்ன தெரியுமா? இறைவன் உனக்குக் கொடுத்துள்ள சக்தியைச் சரிவரப் பயன்படுத்தாவிடில் மேலும் சக்தியை அவர் தரமாட்டார்.

இதனால்தான் முயற்சியும் தளராமையும் இன்றியமையாதவை. இறைவனின் அருளைப் பெறுகின்ற தகுதி அடைய யாராக இருந்தாலும் ஓரளவாவது முயற்சி செய்தே தீர வேண்டும். முயற்சிகளில் ஈடுபட்டால், அவர் அருளால் பத்துப் பிறவிகளில் அனுபவிக்க வேண்டியவை அனைத்தும் ஒரே பிறவியில் அனுபவிக்கப்பட்டு வினைப்பயன்கள் தீர்ந்துவிடுகின்றன. இறைவனிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

அவதார புருஷர்கள் மனிதர்களாக இவ்வுலகில் திருவிளையாடல் புரியும் போது, நம்மைப்போல ஆன்மிகத் தெளிவின்மையும், குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட அறிவும் கொண்டவர்களாக இருக்க வேண்டியுள்ளது. ஆன்மிக இருளிலிருந்தும் அறியாமையிலிருந்தும் வெளிவர அவர்களும் நம்மைப்போல் முயற்சிகள் மேற்கொண்டு முக்திக்கான பாதையைக் கண்டுபிடிக்காத வரை அவர்களின் உண்மையான தெய்வ இயல்பு அவ்வப்போது சிறிது நேரம் வெளிப்பட்டு மறைந்துவிடுகின்றது.

மற்றவர்களின் நன்மைக்காக மாயையாகிய திரையை ஏற்றுக்கொண்டு, இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் பாதையை நம்மைப் போன்று அவர்களும் தேடுகின்றனர். ஆனால் சிறிதளவு கூடத் தன்னல ஆசைகள் இல்லாத காரணத்தால் நம்மை விட அவர்கள் அதிக ஒளியைக் காண முடிகிறது.

மேலும், தங்களிடம் புதைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளை வெகு எளிதில் வெளிக்கொணர்ந்து ஒருமிக்கச் செய்து விரைவிலேயே வாழ்க்கைப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு உலக நன்மைக்கான செயல்களில் ஈடுபடவும் முடிகின்றது.

அவரை நம்மில் ஒருவராகக் கருதவில்லையெனில், ஆன்மிக சாதனைகளின்போது அவர் மேற்கொண்ட அசாதாரணமான முயற்சி, ஈடுபாடு முதலியவற்றின் காரணத்தை நம்மால் கண்டு பிடிக்க முடியாது. அவர் முழு நிறைவு பெற்றவராக இருந்தால் சொந்த முக்திக்காக ஏன் இத்தகைய தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் எழும். உடலைக்கூட மாய்க்கக் கூடிய இந்தக் கடினமான முயற்சிகள் யாவும் வெறும் நாடகம் என்று கருதத் தோன்றும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தமது வாழ்வில் மேற்கொண்ட உயர்ந்த லட்சியங்கள், சாதனை, நிஷ்டை, தியாகம் முதலியவை நம்மையும் அவ்வாறு செய்யத் தூண்டாமற்போய்விடும். அவர் தெய்வ புருஷர், இவற்றை எல்லாம் செய்ய முடிந்தது நாம் எவ்வாறு செய்ய முடியும்? என்று நமது உற்சாகத்தையே தளர்த்திவிடும். இந்தப் பிறவியில் மாயையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பே நமக்கு இல்லாமல் போய்விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !